சென்னை:பிரபல தமிழ் மற்றும் உருது மொழியில் பத்திரிகையாளரான எம்.பி.ரஃபீக் அஹ்மத் அவர்கள் நேற்று காலை மரணமடைந்தார்கள். இவருக்கு வயது 60 ஆகும்.
கடுமையான இதய அதிர்ச்சியின் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்தது. சென்னையில் முன்பு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் தடா என்ற கறுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட ரஃபீக் அஹ்மத் அவர்கள் பின்னர் குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்டார்.
பெங்களூரிலிருந்து வெளிவரும் ராஷ்ட்ரிய சஹாரா என்ற உருது மொழி பத்திரிகையில் சிறந்த பங்காற்றியுள்ளார். ஆல் இந்தியா ஃபாரம் ஃபார் முஸ்லிம் ஜர்னலிஸ்ட் என்ற அமைப்பில் உறுப்பினராகயிருந்தவர் ரஃபீக் அஹ்மத்.
சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் இலவச வெளியீடுகளை தமிழ், ஆங்கிலம், உருது மொழிகளில் வெளியிட்டுள்ளார். கோவைக்குண்டுவெடிப்பின் போது கைதுச்செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் கைதிகள் சிறையில் சித்தரவதைக்காளாக்கப்பட்ட போது அவர்களின் நலனுக்காக துவங்கப்பட்ட PLEA என்ற அமைப்பில் உறுப்பினராக செயல்பட்டு சிறந்த பங்களிப்பை ஆற்றினார்.
இவர் சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நேசத்திற்குள்ளானவர். அவரது உடல் சொந்த ஊரான வாணியம்பாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஆல் இந்தியா ஃபாரம் ஃபார் முஸ்லிம் ஜர்னலிஸ்ட் சார்பாக இரங்கல் கூட்டம் ஒன்று சென்னை பெரியமேட்டில் நடக்கவிருக்கிறது.
source:twocircles
0 கருத்துகள்: on "பத்திரிகையாளர் எம்.பி.ரஃபீக் அஹ்மத் மரணம்"
கருத்துரையிடுக