டாக்கா:பங்களாதேஷின் தேசத்தந்தையும், முதல் அதிபருமான ஷேக் முஜிபுர்ரஹ்மானை கொன்ற கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை கடந்த புதன்கிழமை டாக்கா மத்திய சிறையில் இரவு வேளையில் நிறைவேற்றப்பட்டது.
1975 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் போது ஷேக் முஜீபுர்ரஹ்மானையும் அவருடைய குடும்பத்தாரையும் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கொன்றனர். இச்சம்பவத்தில் 12 பேருக்கு எதிராக நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் 6 பேர் வெளிநாடுகளைச் சார்ந்தவர்கள். ஒருவர் விசாரணைக் காலத்திலேயே மரணமடைந்தார்.
குற்றவாளிகள் மரணத் தண்டனைக்கெதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தபோதும் நீதிமன்றம் அதனை தள்ளுபடிச்செய்தது. தண்டனை நிறைவேற்றப்பட்டதோடு ஷேக் முஜீபுர்ரஹ்மானின் மகளும் தற்போதைய பங்களாதேஷ் பிரதமருமான ஷேக் ஹஸீனாவுக்கு நீதி கிடைத்துள்ளது.
தனது தந்தைக் கொல்லப்படும் பொழுது ஷேக் ஹஸீனாவும் அவருடைய சகோதரியும் வெளிநாட்டில் கல்வி பயின்றுக் கொண்டிருந்தார்கள். இச்சம்பவம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்றது. 1996 ஆம் ஆண்டு ஹஸீனா பிரதமரானபோது கொலையாளிகளுக்கெதிரான விசாரணை துவங்கியபோதும், பின்னர் 2001 ஆம் ஆண்டு கலிதா ஜியா ஆட்சிக்கு வந்தபொழுது அந்த விசாரணை தடைப்பட்டது.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள்:முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் பஸ்லுல் ஹுதா, லெஃப்டினண்ட் கர்னல் முஹியுத்தீன் அஹ்மத், செய்யத் ஃபாரூக் ரஹ்மான், சுல்தான் ஷஹரியார் ராஷித் கான், ஆர்மி லான்ஸர் எ.கெ.எம்.முஹியத்தீன் ஆகியோராவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பங்களாதேஷின் தேசத்தந்தை ஷேக் முஜீபுர்ரஹ்மானின் கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்"
கருத்துரையிடுக