வாஷிங்டன்:தாரிக் ரமதான் எகிப்தில் உருவான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் நிறுவனர் இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்...) அவர்களின் பேரனாவார்.
இவர் எகிப்திலிருந்து வெளியேறி சுவிஸ் நாட்டில் குடிமகனாக இருந்துவருகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அமெரிக்கா நடத்தும் தீவிரவாதத்திற்கெதிரான போரைப் பற்றி விமர்சித்து வருபவர். அத்தோடு ஃபலஸ்தீன் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாத்தின் சிந்தனைகளை பரப்புவதிலும் இவருடைய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் ஹுஸ்னி முபாரக்கின் அரசு காஸ்ஸாவிற்கும் எகிபதிற்குமிடையே எழுப்பி வரும் தடுப்புச்சுவரைப் பற்றி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டார். இவர் தீவிரவாதத்தோடு தொடர்புடையவர் எனக்கூறி 2004 ஆண்டிலேயே அமெரிக்கா விசா தர மறுத்ததோடு அமெரிக்காவில் வருவதற்கு தடையையும் ஏற்படுத்தியது.
அமெரிக்கா மட்டுமல்ல சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட சில முஸ்லிம் நாடுகளிலும் தாரிக் ரமதான் நுழைய தடை உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பான சிவில் லிபர்டீஸ் அமைப்பினரின் கடும் முயற்சியின் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அரசுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தாரிக் ரமதான் அமெரிக்க வருவதற்கான தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனை அரசு செய்தித்தொடர்பாளர் பி.ஜெ.க்ராவ்லி தெரிவித்தார்.
மேலும் க்ராவ்லி தெரிவிக்கையில்: "தாரிக் ரமதான் மற்றும் ஜொகனஸ்பர்கின் பிரபல இஸ்லாமிய அறிஞர் ஆதம் ஹபீப் மீதான தடை நீக்கப்படுகிறது. காரணம் இவர்களால் அமெரிக்காவிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பது தெளிவானதால்.
இருவரும் தாங்கள் அமெரிக்கா வர நடைமுறையில் உள்ள விசா கோருவதற்கான மனுவை அளிக்கலாம். இது அமெரிக்க அரசு முஸ்லிம் உலகத்தோடு தொடர்பை ஏற்படுத்துவதற்கான ஊக்குவிப்பாகும்.
நாங்கள் சர்வதேச அளவிலான பயன்தரத்தக்க கலந்துரையாடலுக்கு இஸ்லாமிய அறிஞர்களை அமெரிக்காவிற்கு அழைக்கிறோம். அவர்கள் இங்கு வந்து பிற நம்பிக்கையாளர்களுடன் கலந்துரையாடலாம்” என்று குறிப்பிட்டார்.
இதனை அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் வரவேற்றுள்ளது, "இது முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம்" என்று கூறியுள்ளது.
தாரிக் ரமதான் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில்,"இந்நடவடிக்கை அமெரிக்கா முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலுக்கு ஆர்வமாக உள்ளது என்பதை காட்டுகிறது.மேலும் எகிப்து, சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளும் என் மீதான தடையை விரைவில் எந்த நேரத்திலும் நீக்கும் என சிறிதளவு நம்பிக்கை உள்ளது. நான் விரைவில் அமெரிக்கா செல்வதற்கான விசாவுக்கு மனு அளிப்பேன்" என்றார் அவர்.
Source: Reuters
0 கருத்துகள்: on "பேராசிரியர் தாரிக் ரமதான் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா"
கருத்துரையிடுக