
இவ்விஷயத்தில் மம்தா பானர்ஜிக்கு இந்திய நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உளப்பூர்வமான நன்றியை அர்ப்பணிக்கிறோம்.
மனிதநேயமும், ஜீவகாருண்யமும் ஒரு ரெயில்வே பட்ஜட்டிற்கு அளித்தது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். வாழ்க்கைக்கும் மரணத்திற்குமிடையே போராடிக்கொண்டிருக்கும் புற்று நோயாளிகளுக்கு கருணை காண்பித்தது சிறந்த உதாரணமாகும். நமது ரெயில்வே துறை மெதுவாகத்தான் வளர்ந்தது.
சுதந்திரம் கிடைத்த காலக்கட்டத்தில் 54 ஆயிரம் கிலோமீட்டராக இருந்த ரெயில்வே பாதை இன்று 64,100 கிலோமீட்டர் மட்டுமே வளர்ந்துள்ளது. அதாவது 62 வருடத்தில் வெறும் 10,100 கிலோமீட்டர் மட்டுமே வளர்ச்சியை சந்தித்துள்ளது. 2020 ஆண்டில் 25 ஆயிரம் கிலோமீட்டர் பாதை அதிகரிக்கப்பட வேண்டும் என்று தற்போதைய பட்ஜட்டில் நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 25 ஆயிரம் கிலோமீட்டர் பாதை பணி பூர்த்தியடையாமலேயே மேலும் 12 ஆயிரம் கிலோமீட்டர் உட்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 1000 கிலோமீட்டர் அளவிலான லைன்கள் நிர்மாணிக்கப்படும் என்று பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவர்டைம் வேலைச் செய்தாலொழிய இதனை சாதிப்பது கடினமான ஒன்று.
ரெயில்வே துறையின் வளர்ச்சிக்கு தேவையான பணத்தை அளிக்கவேண்டும் என்று மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ரெயில்வேக்கு தேவையான பணத்தை ரெயில்வேதான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறிவிட்டார். ரெயில்வேக்கு நிதித்திரட்டுவதற்கான வழியாக மம்தா பானர்ஜி கண்டுபிடித்தது தனியார்த் துறைகளின் பங்களிப்பு. ரெயில்வேயை தனியார் மயமாக்கமாட்டோம் என்று உறுதிபட பட்ஜட்டில் கூறப்பட்டிருந்தாலும் தனியார்த்துறையின் பங்களிப்பை எதிர்பார்க்கிறது பட்ஜட். இந்த சிந்தனை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தான எதிர்காலத்தை தோற்றுவித்துவிடும்.
தனியார்துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பது என்பதற்கு விரிவான பொருள் உண்டு. ரெயில்வே ஸ்டேசன்களும், ரெயில்வே பாதைகளும் உருவாக்க தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொழுது அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை சாதாரணமக்களால் தாங்க முடியாத சூழல்தான் ஏற்படும்.பொதுத்துறையில் தனியார்துறையின் அத்துமீறல் பூரணமாக மாறிவிடும். எனவே இந்த முயற்சியை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக ரெயில்வேயின் மொத்த வருமானம் உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் மட்டுமே. அடுத்த 10 ஆண்டுகளில் இதனை 3 சதவீதமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பட்ஜட்டில் நமது தமிழ்நாட்டிற்கு சாதகமான சில அம்சங்களும் உள்ளது பாராட்டத்தக்கது. தமிழகத்துக்கு 14 புதிய ரயில்கள் விடப்படுகின்றன. சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனப்படுத்தப்படும்; அங்கு மேலும் ஒரு உற்பத்தி பிரிவு தொடங்கப்படும் என்று மம்தா அறிவித்துள்ளார். வேளச்சேரி&பரங்கிமலை ரயில் திட்டப் பணிகள் 2012 மார்ச்சுக்குள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதையும் பாராட்டவேண்டும். ரெயில்வேத்துறை நடத்தும் தேர்வுகளுக்கு சிறுபான்மையினர்,பெண்கள், பொருளாதாரத்தில் பின்னடைந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் விலக்களிக்கப்படுகின்றனர் என்பதும், மதரஸா மாணவர்களுக்கு ரெயிலில் பயணம்செய்ய கட்டண சலுகை தொடரும் என்று கூறியுள்ளதும், ரெயில்வேத்துறை தேர்வுத்தாள்கள் உருதுமொழியிலும் வழங்கப்படும் என்பது ஆறுதலான விஷயம்தான். பெண்களின் பாதுகாப்பிற்கு மஹிளா வாஹினி என்ற பாதுகாப்பு படை ஏற்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படையில் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்த பிற்படுத்தப்பட்ட மக்கள்,இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியிள்ளதும் பாராட்டத்தக்கதுதான்.
மொத்தத்தில் இந்த பட்ஜட் நடுத்தர ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் தனியார்மயத்தை ஊக்குவிப்பது என்பதுதான் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்: on "ரெயில்வே பட்ஜட்-2010 பாராட்டும் நெருடலும்"
கருத்துரையிடுக