ஹன்ட்ஸ்வில்லி: அலபாமா பல்கலைக்கழகத்தின் ஹன்ட்ஸ்வில்லி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியப் பேராசிரியர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஒரு பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குள்ள உயிரியல் பிரிவு கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 உயிரியல் பேராசிரியர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாரும் காயமடையவில்லை என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ரே கார்னர் தெரிவித்தார்.
துப்பாக்கியால் சுட்டதாக பிடிபட்டுள்ள பேராசிரியையின் பெயர் அமி பிஷப். இவரும் உயிரியல் பேராசிரியைதான். இந்த சம்பவம் தொடர்பாக அமி பிஷப்பின் கணவரும் பிடிபட்டுள்ளார்.
பிடிபட்ட அமி பிஷப் மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த 2003ம் ஆண்டு இந்த வளாகத்தில் பணியில் சேர்ந்தார் அமி பிஷப். அவரது கணவர் பெயர் ஜிம் ஆண்டர்சன். இருவரும் இணைந்து சிறிய செல் இன்குபேட்டர் கருவியைக் கண்டுபிடித்து அதற்காக பரிசையும் வென்றவர்கள் ஆவர்.
நியூரிஸ்டர் என்ற பெயரிலான சைபர்நேட்டிக்ஸ் ஆய்வுத் திட்டத்தில் பணியாற்றி வந்தார் அமி பிஷப். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், அமி பிஷப்புக்கும் இடையே, அவரது கண்டுபிடிப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்ததாக தெரிகிறது. இதுதான் துப்பாக்கிச் சூடுக்குக் காரணமாக இருக்கும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த மூவரில் கோபி கே. போடிலா இந்தியர் ஆவார். இவர் உயிரியல் அறிவியல் துறை தலைவராக இருந்து வந்தார். மற்ற இருவரும் பேராசிரியர்கள் மரியா ராக்லேன்ட் டேவிஸ் மற்றும் அட்ரியல் ஜான்சன் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 7500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகம், அறிவியல், பொறியியல் பிரிவுகளில் சிறப்பான கல்வியைத் தரும் நிறுவனமாகும். நாசாவுடன் இணைந்தும் பல்வேறு ஆய்வுகளை இது மேற்கொண்டு வருகிறது. இங்கு நாசாவின் ஆய்வு மையம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
source:thatstamil
0 கருத்துகள்: on "யு.எஸ்.பல்கலைக்கழகத்தில் விபரீதம் - பேராசிரியை சுட்டு இந்தியர் உள்பட 3 பேர் பலி"
கருத்துரையிடுக