புனே: புனேயின் ஓசோ ஆசிரமம் அருகே பிரபல ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடித்தது. இதில் வெளிநாட்டினர் 4 பேர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயின் கோரேகான் பகுதியில் உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில், இன்று இரவு சுமார் 7.15 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். வெளிநாட்டினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சசூன், ஜஹாங்கிர் மற்றும் உத்ராணி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகில்தான் யூதர்களின் பிரார்த்தனை நிலையமான சபாத் உள்ளது. மும்பை தீவிரவாதத்தாக்குதலில் பங்குள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட டேவிட் கோல்மான் ஹெட்லி தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் நேரில் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இது சிலிண்டர் வெடிவிபத்து அல்ல என்றும், பயங்கரவாத தாக்குதல் தான் என்றும் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சி.பி.ஐ ஃபாரன்சிக் குழுவும், தேசிய புலனாய்வு ஏஜன்சியின் குழுவும் சென்றுள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார். காயமடைந்தவர்களின் ஒரு சூடான் நாட்டைச்சார்ந்தவர் உட்பட மூன்று வெளிநாட்டினரும் உட்படும்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்: on "புனேயில் குண்டுவெடிப்பு:8 மரணம்"
கருத்துரையிடுக