14 பிப்., 2010

துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி - திரளான மக்கள் பங்கேற்பு

துபாயில் கடந்த 12-02-2010 அன்று வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகைக்குப் பின்னால் தேரா கோட்டைப் பள்ளிவாசலில் வைத்து சமூக விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி அமீரக கடையநல்லூர் சகோதரர்களால் ஏற்பாடுச் செய்யப்பட்டு இனிதே நடந்தேறியது.இந்நிகழ்ச்சிக்கு முன்னுரை வழங்கினார் கடையநல்லூரைச் சார்ந்த சகோதரர் மியாகான், நிகழ்ச்சியைப் பற்றிய அறிமுக உரையை கடைய நல்லூர் சகோதரர் ஜாஹிர் அவர்கள் ஆற்றினார்கள்.
சமூக எழுச்சியின் அவசியம் பற்றி தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த கடையநல்லூர் சகோதரர் பஸ்லுர்ரஹ்மான் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில்,
பல்வேறு சமூகங்களையும், கலாச்சாரங்களையும், இயற்கை வளங்களையும் தன்னகத்தேக்கொண்டு திகழும் நமது இந்திய தேசத்தின் அரசியலமைப்புச் சட்டம் தேசத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு சமூகங்களுக்கும் உரிய பங்கீடு வழங்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இதனடிப்படையில் சுதந்திரம், நீதி, பாதுகாப்பு இவையனைத்தும் அனைத்து சமூக மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கப்பெறவேண்டும்.பொருளாதார வளர்ச்சியில் பீடு நடைப்போட்டுச் செல்லும் நம் தேசத்தின் முக்கிய சமூகங்களான முஸ்லிம்கள்,தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,ஆதிவாசிகள் ஆகியோர் தேச வளர்ச்சியிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றனர். இந்தியாவின் முக்கிய சமூகமும், இந்நாட்டின் சுதந்திரத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் அர்ப்பணிப்பை தந்தவர்களுமான முஸ்லிம்கள் இந்தியாவில் பாதுகாப்பு, அடையாளம்,உரிய பங்கீடு ஆகிய மூன்று முக்கியபிரச்சனைகளை எதிர்க்கொள்வதாக பிரதமரால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிஷன் கூறுகிறது. இந்திய தேசம் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளினால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவருகிறது. இவையனைத்திலிருந்தும் இந்தியதேசம் பாதுகாக்கப்படவேண்டும். இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பாதுகாக்கப்பட்டு அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெறவேண்டும். அதற்கு ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வை பெற்றாகவேண்டும்.

தேசிய வளங்களில் ஒவ்வொரு சமூகமும் தனக்குரிய பங்கைப் பெற்றிடுவதற்கான முயற்சிகளில் களமிறங்கவேண்டும். இத்தகைய சமூக விழிப்புணர்வே சமூக எழுச்சியாகும்.சமூகத்தின் எழுச்சியே தேசத்தின் பரிபூரண வளர்ச்சியாகும். இத்தகையதொரு எழுச்சியில் அனைவரும் பங்காளிகளாக மாறவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்ஃபேர் அசோசியேசன் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு தாங்கள் செய்துவரும் சமூக பணிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பை கோரினர்.இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பணியாற்றிவரும் கடையநல்லூரைச் சார்ந்த ஏராளமான மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இதர ஊர்களைச் சார்ந்த சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியாக சகோதரர் அப்துல் கனி அவர்கள் நன்றியுரை நவில கஃபாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் தாங்கள் சமூக எழுச்சியின் பங்காளர்களாவோம் என்ற உறுதியுடன் கலைந்துச் சென்றனர்.
தகவல்:அமீரக கடையநல்லூர் சகோதரர்கள்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி - திரளான மக்கள் பங்கேற்பு"

கருத்துரையிடுக