புதுடெல்லி:ஆஸம்கரில் முஸ்லிம்களின் காங்கிரஸ் மீதான கோபத்தை தணிக்க ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் ஆஸம்கரில் போலீஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் ஆஸம்கரில் மீண்டும் கைதுப்படலம் நடந்துள்ளது.
ஆஸம்கரில் கலிஸ்பூர் கிராமத்தில் ஷஹ்ஷாத் அஹ்மத் என்ற இளைஞரை சிவிலியன் உடையில் வந்த 25 ற்கும் மேற்பட்ட போலீஸ் குழு கைதுச்செய்தது. வீட்டில் அத்துமீறி நுழைந்த உ.பி மாநில தீவிரவாத எதிர்ப்புப்படையைச் சார்ந்த போலீஸார் அங்கிருந்த பெண்கள் உட்பட உறவினர்களை அடித்து உதைத்தபின் ஷஹ்ஸாதை கடத்திச்சென்றனர். போலீசில் புகார் அளிக்க ஷஹ்ஸாதின் உறவினர்கள் செல்லும் பொழுதுதான் தெரியும் ஷஹ்ஸாதை கடத்திச் சென்றது போலீஸார் என்று.
கடந்த திங்கள் கிழமை மதியம் 3.30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி என்றுக் கூறித்தான் போலீஸ் ஷஹ்ஸாதைக் கைது செய்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் என்ற இயக்கத்தின் உறுப்பினர் ஷஹ்ஸாத் என போலீஸ் கூறுகிறது.
போலீஸ் தாக்குதலில் ஷஹ்ஸாதின் மாமாவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தீவிரவாதத்தொடர்பு எனக் குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டவர்களையும், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களுமான இளைஞர்களின் உறவினர்களைத்தான் திக் விஜய் சிங் இன்று சந்திக்கச் செல்கிறார்.
இவர்களை நேரடியாக சந்திக்க திக் விஜய் சிங்கே முயற்சி எடுத்துச் செல்வதாக செய்திகள் கூறுகின்றன. ஸான்ஜர்பூரில்தான் திக் விஜய் சிங் முதலில் செல்கிறார். பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஆதிஃப் அமீன், முஹம்மது ஸாஜித் ஆகியோரின் உறவினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
ஆஸம்கரின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி சந்தோஷ் சிங், எழுத்தாளரான அம்ரேஷ் மிஷ்ரா ஆகியோர் திக் விஜய் சிங்கோடு ஆஸம்கர் செல்கின்றனர். அதே வேளையில் துயரங்கள் அடங்கிய புகார்களோடு திக் விஜய் சிங்கை காத்திருக்கின்றது ஆஸம்கர். சிறையில் அடைப்பட்டுக்கிடக்கும் தங்களின் பிள்ளைகளின் விடுதலைக்கும், போலீஸின் அக்கிரமங்கள் அடங்குவதற்கும் திக் விஜய் சிங்கின் வருகை பயன் அளிக்குமென ஆஸம்கர் மக்கள் கருதுகின்றார்கள் என பாட்லா ஹவுஸில் கைதுச்செய்யப்பட்ட ஸைஃபின் தந்தை ஷாபாத் அஹ்மத் கூறுகிறார்.
பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் சந்தேகத்தை தெரிவித்த ஒரே காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் என்று ஷாபாத் கூறுகிறார். ஸாஜர்பூருக்கு சென்ற பிறகு திக் விஜய் சிங் பீனாபாராவுக்கு செல்வார். அங்கு அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அபு பஷீரின் வீட்டிற்குச் செல்வார் எனக்கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆஸம்கரில் மீண்டும் கைதுப்படலம்: திக் விஜய் சிங் இன்று ஆஸம்கட் செல்கிறார்"
கருத்துரையிடுக