சண்டிகர்: சிறுமி ருசிகா கற்பழிப்பு வழக்கில் சாதாரண அளவிலான தண்டனை பெற்ற மாஜி டிஜிபி ரத்தோரை, நேற்று சண்டிகர் கோர்ட் வளாகத்தில் தேசிய வடிவமைப்புக் கழக முதுநிலை மாணவர் ஒருவர் சரமாரியாக குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பன்ச்குலாவில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இன்று ருசிகா வழக்கு தொடர்பான ரகசிய விசாரணை நடைபெற்றது. இதற்காக ரத்தோர் தனது வக்கீலும், மனைவியுமான அபாவுடன் வந்திருந்தார்.
வழக்கை முடித்து விட்டு அவர் வெளியே வந்தபோது திடீரென ஒருவர் பாய்ந்து வந்தார். அவரது கையில் கத்தி இருந்தது. ரத்தோரை நெருங்கிய அந்த நபர், ரத்தோரின் முகத்தில் மூன்று முறை பலமாக குத்தினார். இதில் நிலை குலைந்தார் ரத்தோர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். ரத்தோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் உத்சவ் சர்மா என்று தெரிய வந்துள்ளது. அவர் சண்டிகரில் உள்ள தேசிய வடிவைப்புக் கழகத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வருகிறார்.
இதுகுறித்து அக்கழகத்தின் இயக்குநர் பிரத்யுமா வியாஸ் கூறுகையில், இங்கு படிக்கும் மாணவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கழகம் நடவடிக்கை எடுக்கும். அதன் அடிப்படையில், உத்சவ் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சமீர் மோரே கூறுகையில், உத்சவ் சர்மா இங்கு அனிமேஷன் மற்றும் திரைப்பட வடிவமைப்பு தொடர்பான முதுநிலை டிப்ளமோ படித்து வருகிறார். 2 ஆண்டுகளை அவர் முடித்துள்ளார். இருப்பினும் இன்னும் அவர் இன்டர்ஷிப்பை முடிக்காததால், அவருக்கு டிப்ளமோ தரப்படவில்லை. சர்மாவின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "ருசிகா வழக்கு - மாஜி டிஜிபி ரத்தோரை மாணவர் ஒருவர் சரமாரியாக குத்தியதால் பெரும் பரபரப்பு"
கருத்துரையிடுக