புதுடெல்லி:சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்கக்கோரி தேச அளவிலான போராட்டத்தை துவக்க முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தவேண்டும் என்றும் முஸ்லிம் அமைப்புகளின் 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இதற்கான ஒருங்கிணைந்த கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டது.இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்காக சட்டரீதியான போராட்டம் நடத்தப்படும்.
இடஒதுக்கீட்டிற்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு விரோதமான சமீபகாலங்களில் வழங்கப்பட்ட நீதிமன்றத்தீர்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பப்படும். இம்மாநாட்டில் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், அஹ்லே ஹதீஸ், ஆல் இந்தியா மைனாரிட்டி கமிட்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு அமைப்பின் பிரதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஒ.பி.சி பட்டியலில் வேறுபாடுகள் உள்ளது மிகப்பெரிய குழப்பமானது என்று மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். முஸ்லிம்களுக்கிடையில் சாதிகள் இல்லையென்பதால் இடஒதுக்கீட்டின் பலன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டிற்கு தடையாக இல்லை.மாறாக அரசியல் சட்டத்திற்கு விரோதமான நீதிமன்றத் தீர்ப்புகளும், அரசியல் கட்சிகளும்தான் இடஒதுக்கீட்டு விவகாரத்தை சிக்கலாக்குகின்றனர் என்ற அபிப்ராயம் தெரிவிக்கப்பட்டது. 27 சதவீதம் மக்கள் தொகைக் கொண்ட மேற்குவங்காளத்தில் தற்ப்பொழுதுதான் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதுவும் எல்லா முஸ்லிம்களுக்கும் இந்த இடஒதுக்கீடு கிடையாது என்றும் மேற்குவங்காள மாநிலத்திலிருந்து கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அரசு வேலையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெறும் 2.1 சதவீதமானதால் அனைத்து முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு பயன் கிடைக்க வேண்டும். கேரளத்தில் இடஒதுக்கீடு இருந்தும் முஸ்லிம்கள் பிற்பட்ட நிலையிலிருப்பதற்கு காரணம் வளைகுடா நாடுகளுக்கு செல்வதாலோ அல்லது கல்வி இல்லாததாலோ அல்ல என்றும் ஒவ்வொரு மாநிலத்தின் நிலை வித்தியாசமானது என்றும் இம்மாநாட்டில் தலைமைவகித்த சச்சார் கமிட்டின் முன்னாள் உறுப்பினரான டாக்டர்.அபூஸாலிஹ் ஷரீஃப் தெரிவித்தார்.
கல்வி ரீதியாக முஸ்லிம்கள் ஆதிவாசிகளைவிட பின் தங்கிய நிலையிலில்லை.ஆனால் அரசு வேலைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பரிசோதித்தால் பல மாநிலங்களிலும் முஸ்லிம்கள் ஆதிவாசிகளைவிட பின் தங்கிய நிலையில் உள்ளது தெளிவாவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜாமிஆ ஹம்தர்த் பல்கலைக்கழக வைஸ் சான்ஸ்லர் செய்யத் ஹாமித் மாநாட்டை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி.செய்யத் ஷஹாபுத்தீன், முஜ்தபா பாரூக், ஸஃபர் செய்புல்லாஹ், ஷாஹித் சித்தீகி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
1 கருத்துகள்: on "முஸ்லிம் இயக்கங்கள் தேச அளவிலான போராட்டத்திற்கு தயாராகின்றன"
keep unity for all things
கருத்துரையிடுக