20 பிப்., 2010

சமூக வலிமையடைதலும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் - பாப்புலர் ஃப்ரண்ட் கருத்தரங்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மதுரையில் நடத்தும் சமூக எழுச்சி மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று துவங்கியது. அதனைத் தொடர்ந்து "சமூகம் வலிமையடைதலும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும்" எனும் தலைப்பில் காலை 10.15 மணிக்கு வி.பி. சிங் அரங்கில் (குப்தா ஆடிட்டோரியம், அண்ணா நகர்) பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ. யா முகைதீன் அவர்கள் வரவேற்புரையுடன் கருத்தரங்கம் துவங்கியது.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். ஷெரீஃப் அவர்கள் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் மண்டல் கமிஷன் அறிக்கைக்கு பின்பு தலித்துக்கள், யாதவ்களும் அரசியல் ரீதியாக முன்னேரியுள்ளனர். முஸ்லிம்கள் மட்டும் அதே நிலையில் இருந்து வருகிறார்கள். சமூக முன்னேற்றத்திற்காக உழைப்வர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இத்தகைய அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் எவ்வித தியாகங்களுக்கும் தயாராக தொடர்ந்து உழைப்பது நல்ல எதிர்காலத்திற்காக செய்யும் சிறந்த முதலீடாகும் என்று குறிப்பிட்டார்.

தெஹல்கா ஆங்கில புலனாய்வு இதழின் முதன்மை ஆசிரியர் திரு. அஜித் சாகி அவர்கள் கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றுகையில், "இந்தியாவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. மேலிருந்து கீழ் வரை அதிகார மையத்தின் எந்த மட்டத்திலும் முஸ்லிம்கள் போதிய அளவுக்கு இல்லை. முஸ்லிம்களுக்கெதிரான காழ்ப்புணர்வு அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் நிலவுகிறது. பத்திரிகைத்துறையில் இருக்கக் கூடிய முஸ்லிம்களைக்கூட தீவிரவாதிகளாகப் பார்க்கும் மனநிலைதான் இங்கு நிலவுகிறது என்பதற்கு பத்திரிகையாளர் இஃப்திகர் ஜீலானியின் சிறைவாசம் நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் சத்தியத்திற்காக உயிரையும் விடத் தயாராக இருந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றக் கூடியவர்கள்தான் நீங்கள். எனவே நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை" என்று குறிப்பிட்டர்.

மாநாட்டின் கருப்பொருளை (Theme) பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொருளாளரும் விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியருமான எம். முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
பன்மைச் சமூக அமைப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் குற்றப்பரம்பரையாக பார்க்கும் மனநிலையை வளர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது என டெல்லி பல்கலைக்கழக பேரா. எஸ்.ஏ.ஆர். ஜீலானி அவர்கள் 'ஊடகங்கள் தீவிரவாதிகளை உருவாக்கும் விதம்' எனும் தலைப்பில் பேசும்போது குறிப்பிட்டார்.

தொடர்ந்து "தீவிரவாதத்தின் பன்முகம்" எனும் தலைப்பில் மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின்( NCHRO) கௌரவ தலைவர் வழக்கறிஞர் திரு.டி.லஜபதிராய் அவர்கள் உரையாற்றினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழக அமைப்பாளர் பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் 'சிறுபான்மையினரின் உரிமைகளும் பாரபட்சங்களும்' எனும் தலைப்பில் பேசும்போது, "இடஒதுக்கீடு ஒன்றே ஒடுக்கப்பட்ட சமூகங்கள் வலிமையடைய ஒரே வழி!" என்று கருத்தரங்கின் மையக்கருத்தை ஒட்டி ஆய்வுரையை வழங்கினார்.

இந்தியாவில் இடஒதுக்கீட்டின் வரலாறு, முஸ்லிம்களுக்கு இடைகாலத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட வரலாறு, இட ஒதுக்கீட்டின் அவசியம் என நீண்ட கருத்துரையை இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா அவர்கள் நிகழ்த்தினார்.

அரசியல் பிரநிதித்துவமும் ஜனநாயகமும் எனும் தலைப்பில் SDPIயின் மாநில பொருளாளர் எஸ். எம்.ரஃபீக் அஹமது அவர்கள் பேசும் போது, தற்போது இருக்கும் தேர்தல் முறையில் அனைத்து சமூகங்களுக்கும் சம பங்கீடு கிடைப்பதில்லை என்றும் தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்றும் குறிப்பிட்டார்.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் எம். நிஜாம் முஹைதீன் அவர்கள் நன்றியுரையாற்ற கருத்தரங்கம் நிறைவுபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், பெண்கள், பல்வேறு சமூக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சமூக வலிமையடைதலும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் - பாப்புலர் ஃப்ரண்ட் கருத்தரங்கம்"

கருத்துரையிடுக