கடையநல்லூர் மசூது கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் மசூது உடல் என்ன ஆனது என்பது குறித்து மனுத்தாக்கல் செய்ய அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லை கடையநல்லூரைச் சேர்ந்த அசனம்மாள் (32), உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் முகமது மசூது. அவரை கடந்த 2005 நவம்பர் 28ல் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மற்றும் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு கணவர் வீடு திரும்பவில்லை. சிபிசிஐடி விசாரணையில் என் கணவரை போலீசார் கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுக்கு மேலாகியும் கணவரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.
ஏடிஎஸ்பி பிரதாப்சிங், டி.எஸ்.பி.க்கள் ஈஸ்வரன், சந்திரபால், இன்ஸ்பெக்டர் துரை லெட்சுமணராஜூ, எஸ்.ஐ. சத்தியராஜ், தலைமை காவலர்கள் ரத்தினசாமி, பாஸ்கரன், மைக்கேல் சந்திரன், முத்து, ஸ்டீபன் உட்பட 12 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கணவரின் உடல் கிடைக்காத நிலையில் போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும், வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.10 லட்சம் நஷ்டஈடு தரவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
மனுவை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ரத்தினம், ஜின்னா ஆஜராகினர். குற்றப்பத்திரிகைக்கு தடைவிதித்த நீதிபதி, மனுதாரரின் கணவரின் உடல் என்ன ஆனது? என்பது குறித்து மனுத்தாக்கல் செய்ய அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். பின்னர், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
source:dinakaran
0 கருத்துகள்: on "கடையநல்லூர் மசூது கொலை வழக்கு குற்றப்பத்திரிகைக்கு ஐகோர்ட் தடை. மேலும் உடல் என்ன ஆனது? என்பது குறித்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவு"
கருத்துரையிடுக