சரியாக மாலை 6.50 மணிக்கு பொது கூட்டம் ஷஹீது திப்பு சுல்தான் திடலில் துவங்கியது.
மாநாட்டு ஒருங்கினைப்பாளரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவரான ஏ.எஸ் இஸ்மாயில் வரவேற்புறையாற்றினார். மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை உரையாற்றினார். அவரது உரையில் 'முஸ்லிம் சமூகத்தின் மீது இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் அளவுகடந்து சென்று கொண்டிருக்கின்றது. உரிமைகளுக்காக நியாயமான கோரிக்கைகளுக்காக ஜனநாயக அடிப்படையில் போராடும் முஸ்லிம்களை குற்றவாளியாக சித்தரித்து புகைப்படம் எடுப்பது கைரேகை பெறுவது பொய்வழக்கு போடுவது என மனித உரிமை மீறல்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்திய அளவில் 13.4சதவீதமும் தமிழகத்தில் 5.6சதவீதமும் உள்ள முஸ்லிம்கள் எதில் நீதியைப் பெற்றிருக்கின்றார்கள். கல்வி பொருளாதாரம் அரசியல் என அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களுக்கு சமூக நீதியின் அடிப்படையிலும் வழங்க வேண்டிய உரிய பங்கீடு மறுக்கப்பட்டிருக்கின்றது.
தமிழகத்தில் அறிஞர் அண்ணா காலம் தொட்டே முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான இடஒதுக்கீட்டை தமிழக அரசு தந்துள்ளது. நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் முஸ்லிம்களின் சதவீதத்திற்கு ஏற்றார் போல் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனாலும் 3.5சதவீதம் என்பது முஸ்லிம்களுக்கு நன்மை ஏற்படட்டும் என்கிற நன்நோக்கத்தின் துவக்கமாகவே கருதுகின்றோம். எனவே இதை அதிகரித்து முஸ்லிம்களின் சதவீதத்திற்கு தகுந்தார் போல் இடஒதுக்கீடு தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கே நீதி? நீதிமன்றங்கள்தான் நீதி வழங்கும் இறுதி மன்றம். ஆனால் நீதிமன்றங்கள் கூட முஸ்லிம்களை வஞ்சிக்கின்றன. நீதிமன்றங்களால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டதின் மறக்க முடியாத அடையாளம்தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு. நமது தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் 2008ல் 48 கிராமத்தைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 கிராமத்தில் தலித்துகள் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. 29 கிராமங்களில் பொது இடங்களில் தலித்கள் டீ கடை வைப்பதற்குக்கூட அனுமதி இல்லைஇ 11 கிராமங் களில் அரசே நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில்கூட தலித்துகள் சரிசமமாக அமர முடிவதில்லை. தபால் துறை தலித்துகளுடைய பகுதியில் வீடு வீடாக கடிதங்கள் வழங்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இவையெல்லாம் கற்பனைக் கதைகளோ பழைய வரலாறோ அல்ல. நவீன காலத்தின் கொடூரமான ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மைகள். எனவே நாம் போராடியே தீர வேண்டும் இப்போராட்டதில் முழு நியாயமும் நம் பக்கம்தான். வாருங்கள் நாம் ஒன்றிணைவோம். சுந்திரம்! நீதி! பாதுகாப்பு! நமக்கும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் போராடுவோம். வலிமை பெறுவோம்.' என்று கூறினார்.
தேசிய தலைவர் இ.எம் அப்துர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். அவரது உரையில் தமிழ்நாட்டிற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கெதிராக நிலவி வந்த ஜாதியம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராடி நிதியை பெற்றுத் தந்த வரலாறு உண்டு. தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கம் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்த சமூக எழுச்சி அத்தகைய ஒரு மாநாடு பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு எழுச்சி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் வகுப்புவாதம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு இயந்திரமும் நீதித்துறையும் தவறிவிட்டது. இன்னும் ஒருபடி மேலே சென்று இத்தகைய வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாக செயல்பட்டும் வருகிறார்கள்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராடினால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுகிறார்கள். இன்றைய முக்கிய தேவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பங்கீடு கொடுப்பதே. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சென்ற பதவிக் காலத்தில் 36 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தது தற்போது 30 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைந்துள்ளனர். இத்தகைய அவல நிலையைப் போக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தேசிய அளவில் உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து 'பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை' என்ற இலட்சிய முழக்கத்தோடு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற தேசிய இயக்கம் உருவாகியது. இந்த மாபெரும் இயக்கம் தற்போது நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் என்று கூறினார். மேலும் தேசிய அளவில் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை உடனே அமுல்படுத்தி முஸ்லிம்களுக்கு 10மூ இடஒதுக்கீடு வழங்கக் கோரி தேசிய அளவில் பிரச்சாரம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் 'எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் முஸ்லிம்கள் மட்டுமே குறிவைக்கப் படுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு நகரங்களில் ப்ளாட்டுகள் கிடைப்பதில்லை. முஸ்லிம்களுக்கு ராணுவத்தில் காவல்துறையில் உளவுத்துறையில் வேலைக் கிடைப்பதில்லை. இங்கு ஹிந்து மத அதிகார சக்திகள் ஆதிக்கம் செலுத்துவது போல் சர்வதேச அளவில் பொருளாதார ஏகாதிபத்திய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதுதான் உலக முதலாளித்துவம். உலகில் இன்று ஆட்சி புரிவது அரசியல் மையங்களல்ல. மாறாக முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு இணங்க செயல்படும் உளவுத்துறை நிறுவனங்களாகும். இவர்களிடமிருந்து தப்புவதற்கு எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் முடிவதில்லை. ஏன் ஒபாமாவுக்கும் மன்மோகன் சிங்குக்கும் கூட இயலாது. இதில் தலையிட சிறிதளவேனும் துணிச்சலை காட்டியுள்ளார் தமிழகத்தின் ப.சிதம்பரம். இது ஓரளவு பாராட்டிற்குரியதுதான். இத்தகையதொரு ஆபத்தான சூழலில்தான் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து வாழ்வுரிமைக்காக புதிய பாதைகளை தேட சொந்தம் காலில் நின்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு போராடுவதற்கு புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் முன் வந்தது. அதன் பலன் தான் கடந்த ஆண்டு ஜுனில் துவங்கப்பட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). எஸ்.டி.பி.ஐ இந்த குறுகிய காலக்கட்டத்தில் 16 மாநிலங்களில் அதனுடைய இருப்பை அறிவித்துவிட்டது.
திராவிடர் கழகம் தலைவர் திரு.கி.வீரமணி சமூக சமத்துவ படை நிறுவனரும் தலைவருமான திருமதி.பா.சிவகாமி ஐ.ஏ.எஸ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் அ.ஃபக்ரூதீன் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கே.கே.ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரளா மாநில தலைவர் வி.பி. நஸ்ரூதீன் அவர்கள் கர்நாடகா மாநில தலைவர் எஸ்.அஃப்ஸர் பாஷா அவர்கள் ஆந்திரா மாநில தலைவர் மவ்லானா கலீமுல்லா சித்திகீ அவர்கள் மனித உரிமைகளின் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர் பா.மோகன் அவர்கள் ஜமாத்துல் உலமா சபை மாநில துணைத் தலைவர் டி.ஜே.எம் ஸலாஹீத்தீன் ரியாஜி அவர்கள் மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனரும் தலைவருமான அச.உமர் ஃபாரூக் அவர்கள் மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம்.ஷரீஃப் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.
இறுதியாக பின்வரும் மாநாட்டுத் தீர்மானங்கள் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜகான் மாநில செயளாளர் ஏ.ஹாலித் முஹம்மது மற்றும் மாநில பொருளாளர் எம். முஹம்மது இஸ்மாயில் ஆகியோரால் வாசிக்கப்பட்டது.
தீர்மானங்கள்
1. மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை
மத்திய அரசால் மார்ச் 15 - 2005ல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் நியமிக்கப்பட்ட மொழி மற்றும் மத சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் தன்னுடைய அறிக்கையினை மே 22-2007 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த ஆணையம் சிறுபான்மை மக்களுக்கு 15மூ இடஒதுக்கீடும் அதில் 10மூ முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் தனது தேர்தல் அறிக்கையில் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10மூ இடஒதுக்கீடு வழங்கக் கோரி இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுபோன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களுக்கு 3.5சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை இம்மாநாடு பாராட்டுகின்ற அதே வேளையில் தமிழக முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அவர்களின் சமூக பொருளாதார கல்வி ஆகியவற்றினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்று இம்மாநாடு கருதுகின்றது. எனவே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 6சதவீதம் வழங்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
2.குண்டுவெடிப்புகளை மறுவிசாரணை செய்!
இந்தியாவில் முக்கிய நகரங்களில் அவ்வப்போது குண்டு வெடிப்பதும் முஸ்லிம்களை மட்டும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கும் தொடர்கின்றது. மலேகான் நன்தித் தென்காசி கோவா போன்ற குண்டுவெடிப்புகளில் புலன் விசாரணைக்குப் பின் சங்பரிவாரங்களின் தொடர்பு வெளிவந்த பின்பும் இந்நிலை தொடர்கின்றது. எனவே 1992க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளையும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சுதந்திரமான ஆணையத்தின் கீழ் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகின்றது.
3. மரபணு விதைகளை தடை செய்!
சமீப காலமாக உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் என்னும் பெயரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவின் வளங்களை தாரை வார்ப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. அதன் தொடர்ச்சியாக இந்திய விவசாயிகளை அடிமைகளாக்கும் முயற்சியாக அறிமுகமானவையே மரபணு விதைகள். ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மரபணு பருத்தி விதைகளால் ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி. கத்திரிக்காயை சந்தைப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மரபணு விதைகளை முழுமையாகத் தடை செய்ய வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு கோருகின்றது.
4. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணத்தினால் தாறுமாறாக விலைவாசி ஏறிக் கொண்டு செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை சாமான்ய மக்களால் வாங்க முடியாத உயரத்திற்கு ஏறிக் கொண்டே செல்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசாங்கமோ சாக்குப் போக்குகளையும் பொய் வாக்குறுதிகளையும் அளித்து வருகிறது. விலைவாசி உயர்வை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5. பாபர் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும்
சங்பரிவார ஃபாசிஸ்டுகளால் பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது. தொடர்ந்து நரசிம்மராவ் அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான கமிஷன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சமர்ப்பித்த தனது அறிக்கையில் பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாக 68 பேர் மீது குற்றம் சாட்டியது. ஆனால் மத்திய அரசோ யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முயற்சி செய்ய வில்லை. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித் தருவதாக வாக்களித்திருந்தது. மஸ்ஜித் இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளாகியும் 2 முறை காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த போதும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறி விட்டது கண்டிக்கத்தக்கது.இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டி முஸ்லிம்களிடத்தில் ஒப்படைக்குமாறும்இ நீதிபதி லிபரான் அவர்களால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 68 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
6. முஸ்லிம்கள் தங்கள் சொந்த வளங்களைப் பயன்படுத்தியும் முன்னேற முயற்சிக்க வேண்டும்
இந்தியாவில் முஸ்லிம் சமூகம் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் அரசியல் என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கிய அடிமை சமூகமாகவே வாழ்ந்து வருகின்றது. இந்நிலையை மாற்றுவதில் அரசாங்கத்திற்கு எந்த அளவு கடமையிருக்கின்றதோ அதே அளவு தம்முடைய சொந்த வளங்களைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்திற்கும் இருக்கின்றது என்று பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது. எனவே முஸ்லிம் சமுதாயம் தனது சொந்த வளங்கள் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் கலாச்சாரம் இவற்றில் தங்களை சக்திப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென இம்மாநாடு முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்கின்றது.
7.முஸ்லிம் சிறைக் கைதிகள்
இந்தியாவில் முஸ்லிம்களுடைய சமூக நிலைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிஷன் தனது அறிக்கையில் எல்லாத் துறைகளிலும் பின்தங்கியிருக்கின்ற முஸ்லிம் சமுதாயம் இந்தியாவிலிருக்கக் கூடிய சிறைக் கைதிகள் விஷயத்திலும் தங்களின் விகிதாச்சாரத்தைவிட அதிகமான எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றனர் என்கிற வேதனையான விஷயத்தையும் குறிப்பிட்டிருந்தார். இதில் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகமும் விதிவிலக்கில்லாமல் முன்னணியில் இருக்கின்றது என்பதுதான் வேதனையிலும் வேதனை. 5.6சதவீதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய தமிழகத்தில் சிறை கைதிகளாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.6சதவீதம் என சச்சார் கமிஷன் தெரிவித்துள்ளது. சிறையில் முஸ்லிம்கள் தங்களது சதவிகிதத்தை விட அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது வேதனையளிக்கிறது. எனவே தமிழக அரசு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள்இ விசாரணைக் கைதிகளாகவே நீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளை உடனே மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
8.தீவிரவாதிகளை உருவாக்கும் உளவுத்துறை
இந்தியா முழுவதும் குண்டுகள் வெடிப்பதும் குண்டு வெடித்த உடனேயே உளவுத்துறையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதும் போலி என்கவுன்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனுடைய தொடர்ச்சியாக கடந்த 2006 ஜூலை 22 அன்று கோவையில் உளவுத்துறை ஏ.சி ரத்தின சபாபதியால் வெடிகுண்டு நாடகம் அரங்கேற்றப்பட்டது 5 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பெருமளவு வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் கோவையைத் தகர்க்க சதி எனவும் மீடியாக்கள் மூலமாக தமிழகத்தை பீதிக்குள்ளாக்கியது. இந்த நாடகத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் பிரிவு நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த தனது அறிக்கையில் இவையனைத்தும் ஏ.சி.ரத்தின சபாபதி மற்றும் சில காவல்துறை அதிகாரிகளின் சதி என்பதை தெளிவுபடுத்துகிறது. அன்றிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை இம்மாநாடு கண்டிப்பதுடன் உடனடியாக ரத்தினசபாபதி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
9.வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்
முஸ்லிம்களின் மூதாதையர்களால் சமுதாய நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கில் வக்ஃப் செய்யப்பட்ட பல இலட்சம் கோடிக்கணக்கான சொத்துக்கள் முறைப்படுத்தப்படாமல் பல்வேறு அரசு துறைகள் மற்றும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பிலும் சமுதாயத்திற்கு எந்த பயனுமின்றி இருப்பது வருத்தத்திற்குரியது. எனவே இந்தியா முழுவதிலுமுள்ள வக்ஃப் சொத்துக்களை மீட்டு முஸ்லிம்களுடய நலனுக்கு பயன்படும் வகையில் முறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வேண்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் விலைமதிப்பு மிக்க வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள செய்தியும் அதற்கு அதிகார வர்க்கம் துணைபோகும் நிலையும் உள்ளது. இந்நிலையை மாற்றி தமிழக அரசு வக்ஃப் சொத்துக்களை மீட்டு முறைப்படுத்த வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
10.தீண்டாமை ஒழிப்பு
நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவிற்கு விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டோம் என பெருமைப்படும் இந்தக் காலக்கட்டத்திலும் கூட தலித்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்கொடுமை பாலியல் பலாத்காரங்கள் தீண்டாமை இரட்டை டம்ளர் முறை ஆலயங்களுக்குள் நுழைய தடை வழிபாட்டு உரிமை மறுப்பு உள்ளாட்சி துறைகளில் வெற்றிபெற்றும் தலித்கள் நிர்வாகம் செய்ய முடியாத நிலை ஆகியவற்றை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
11.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு
இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட அகதிகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் துயர நிலை தொடர்வது வேதனைக்குரியது. அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யப்படும். தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என இந்திய அரசிடம் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது கண்டனத்திற்குரியது. எனவே இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் துடைக்கப்படும் வகையில் சொந்த ஊர்களில் குடியமர்த்தல் போன்ற நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறும் இலங்கையின் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துமாறும் மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
12.மனித உரிமை மீறல்
தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணையங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது சுவரொட்டிகளைக் கிழிப்பது சமூக சமுதாயப் பணியாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்வது போன்ற பல்வேறு விஷயங்களில் இம்மனிதஉரிமை மீறல் தொடர்கிறது. இம்மனித உரிமை மீறல்களை முற்றாகத் தடுத்து நிறுத்தி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
13. அரசியல் அதிகாரம்
இந்தியா சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளாகியும் அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள் இன்று வரை உரிய பிரதிநிதித்துவம் பெறவில்லை. 80 பேர் இருக்க வேண்டிய நாடாளுமன்றத்தில தற்போது 29 பேர் என்கிற நிலையுள்ளது. சட்டமன்றத்தில் இந்நிலையே தொடர்கிறது. இவர்களும் சம்பந்தப்பட்ட கட்சியின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்களே தவிர முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக குரல் கொடுப்பதில்லை. அனைத்து துறைகளிலும் முஸ்லிம் சமூகம் பின்தங்கியுள்ளதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சமூக எழுச்சியின் ஒரு அங்கமாக அரசியல் அதிகாரத்தை முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீட்டெடுக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ. என்கிற தேசிய அரசியல் பேரியக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முயற்சியில் உருவெடுத்துள்ளது. இம்முயற்சிக்கு முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கருத்துஇ கொள்கைஇ இயக்க வேறுபாடுகளைக் கடந்து பேராதரவு தருமாறு இம்மாநாடு கோருகிறது.
14.வட்டியில்லா வங்கி
இன்று உலகம் முழுவதும் பொருளாதார தேக்கநிலை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வங்கிகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு வட்டி அடிப்படையிலான பொருளாதார அமைப்பே காரணம் எனப் பல பொருளாதார வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடுமையான சர்வதேச பொருளாதார நெருக்கடியிலும் பல நாடுகளில் வட்டியில்லா வங்கி முறை பெரும் வரவேற்பையும் பெரும் முதலீட்டையும் லாபங்களையும் பெற்று வருவதை கவனத்தில் கொண்டு வட்டியின் மூலம் ஏழை உழைக்கும் மக்கள் படும் துன்பங்களைக் கவனத்தில் கொண்டு இந்தியாவில் வட்டியில்லாத வங்கிமுறைக்கு அனுமதி வழங்குமாறும் அதை அமுல்படுத்துமாறும் மத்திய அரசையும் ரிஸர்வ் வங்கியையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
15.ஃபாசிஸம் வீழ்த்துவோம்
வேற்றுமையில் ஒற்றுமை எனும் அடிப்படையில் பல்வேறு சமூக மக்களும் கலந்து வாழும் மதச்சார்பற்ற நாடு இந்தியா. இந்த அடிப்படைகளை தகர்க்கும் விதமாகஇ இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களான தலித்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஆதிவாசிகளை அடிமைகளாக்குவது அல்லது இல்லாமல் ஆக்குவது ஒற்றை ஹிந்து ராஜ்ஜியத்தை (ஆரிய சாம்ராஜ்ஜியத்தை) உருவாக்குவது என்ற செயல் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார அமைப்புகள். இவர்கள் இந்துக்கள் அல்ல. எந்த மதத்தையும் சாராத இந்துத்துவ சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள். இந்துத்துவா என்பது முஸ்லிம்கள் தலித்கள் கிறிஸ்தவர்கள் ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்ட மக்கள் என எல்லோரையும் எதிரியாகப் பார்க்கும் ஃபாசிஸம் ஆகும். ஃபாசிஸம் என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் எதிரானது. எனவே இந்த ஃபாசிஸ பயங்கரவாதத்திற்கெதிராக முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூக மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட இம்மாநாடு அழைப்பு விடுக்கிறது.
இறுதியாக மாநாட்டு உதவி ஒருங்கினைப்பாளரும் மாநில செயளாளருமான எம்.நிஜாம் முஹைதீன் நன்றியுரையாற்றினார்.
source:popularfronttn.org
4 கருத்துகள்: on "மாபெரும் எழுச்சியை ஏற்ப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சமூக எழுச்சி மாநாட்டின் பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்"
It's a milestone for muslim ummath. Muslim ummath has to wake up and come up to the street to get our rights. Insha allah one will come, we will give rights to people without getting request from people.
Abdul Salam
pls insert a conference images.
popular front of india once again proved that it is the only organisation which going to represent muslims in indiia in the future..so i invite social activitists to join hand with popular front of india.. healthy people!! healthy india!!
கருத்துரையிடுக