புதுதில்லி: இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் 31 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழுவின் (National Council for Applied Economic Research- NCAER), ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அவர்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ. 550 க்கும் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. முஸ்லிம்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது என்ற ஆந்திரப் பிரதேச அரசின் முடிவுக்கு இடைக்கால அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர், மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா குழுவும் ஏற்கனவே அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை அளித்திருந்தது. இந்த சூழ்நிலையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, கிராமப்புற மக்களில் தனி நபர் மாத வருமானம் ரூ.356 க்கு கீழும், நகர்ப்புற மக்களின் தனி நபர் மாத வருமானம் ரூ.538க்கு கீழும் இருந்தால் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாவர்.
அந்த ஆய்வில் மேலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:
"2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற முஸ்லிம்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ.338 ஆக இருந்தது.
பழங்குடியினரின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.20 ஆயிரம். தாழ்த்தப்பட்டவர்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.22,800. இதர பிற்பட்ட மக்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.26,091.
முஸ்லிம்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.28,500. முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர்" என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 13 கோடியே 80 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாக கடந்த 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.
source:inneram
0 கருத்துகள்: on "இந்திய முஸ்லிம்கள் 10 பேரில் 3 பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக NCAER ஆய்வில் தகவல்"
கருத்துரையிடுக