இம்பால்:மணிப்பூரில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் நாகா தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்தில் கடந்த 1958ம் ஆண்டு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது.
ஆனால் இந்த சட்டத்தினால் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படவில்லை. மாறாக மனித உரிமை மீறல்களே அதிகளவில் அரங்கேறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலா அருகே உள்ள மாலோம் என்ற கிராமத்தில் ராணுவ வீரர்கள் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டுக் கொன்றதை ஷர்மிளா என்ற இளம் பெண் பார்த்தார்.
கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் அப்பாவி மக்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, இதற்கு காரணமான கொடிய சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
மனித உரிமை மீறல்களை கண்டித்தும், ராணுவ சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து பல மாதங்கள் உணவை மறுத்து வந்த ஷர்மிளாவை போலீசார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். அவருக்கு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக திரவ உணவு அளித்து போலீசார் உயிர் பிழைக்கச் செய்தனர். குறிப்பிட்ட காலம் வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை பொது இடத்தில் தொங்கினார் ஷர்மிளா.
மீண்டும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து வலுக்கட்டாயமாக திரவ உணவு அளிப்பதும், சிறையில் இருந்து விடுதலையாகி ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதும் ஆண்டுதோறும் வாடிக்கையாக நடக்கும்.இப்படியே கடந்த 9 ஆண்டுகளாக ஷர்மிளாவின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கடந்த திங்கள் கிழமை அன்று, சமீபத்தைய நீதிமன்ற காவல் முடிந்து ஷர்மிளா விடுதலை செய்யப்ப்பட்டார்.
30 வயதே ஆன ஷர்மிளா, தொடர் போராட்டம் காரணமாக, வற்றிய உடலும், பிதுங்கிய எலும்புமாக சிறையில் இருந்து வந்தவர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காக பொது இடத்தில் அமர்ந்துவிட்டார்.
இதையடுத்து வழக்கம் போல போலீசார் ஷர்மிளாவை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு திரவ உணவு பலவந்தமாக தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஷர்மிளாவின் போராட்டம், சிறைவாசம் 10வது ஆண்டிலும் தொடர்கிறது.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஷர்மிளாவின் போராட்டம், சிறைவாசம் 10வது ஆண்டிலும் தொடர்கிறது.
0 கருத்துகள்: on "10 ஆண்டுகளாக மனித உரிமைக்காக போராடும் ஷர்மிளா மீண்டும் கைது!"
கருத்துரையிடுக