நீதிமன்றங்களில் மின் ஆளுமை குறித்து ஹைதராபாத்தில் உரையாற்றிய ஆந்திரப்பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி.வி. ராவ் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கணக்கிட்டால் ஒவ்வொரு நீதிபதியிடமும் சுமார் 2,147 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று கூறினார்.
மேலும் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 31.28 மில்லியன் வழக்குகளை முடிக்க 320 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் நீதிபதி வி.வி. ராவ் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் 630 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 17,641 நீதிபதிகள் இருக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 14,576 நீதிபதிகளே தற்போது பதவியில் உள்ளனர். ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு 10.5 நீதிபதிகள் என்ற விகிதத்திலேயே இது அமைந்துள்ளது என்றும் நீதிபதி ராவ் கூறினார்.
ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு குறைந்தது 50 நீதிபதிகளாவது இருக்க வேண்டும் என்று 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கருத்து கூறியிருந்தது என்றும் அவர் கூறினார்.
ஒரு மில்லியனுக்கு 50 நீதிபதிகள் என்பது நிறைவேறுமானால், 2030ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 150 கோடி முதல் 170 கோடிகளாக இருக்கும் போது நீதிபதிகளின் எண்ணிக்கை 1.24 இலட்சமாக இருக்கும். 300 மில்லியன் வழக்குகள் நிலுவையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் கல்வியறிவுள்ளவர்களாகவும், விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் இருக்கும்போது வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டிலேயே அதிக கல்வியறிவுள்ள கேரள மாநிலத்தில் 1000 பேருக்கு 28 புதிய வழக்குள் தொடுக்கப்படுகின்றன என்றும், கல்வியறிவில் பின்தங்கியுள்ள பீகார் மாநிலத்தில் இது 1000 பேருக்கு மூன்று வழக்குகள் என்ற அளவில் இருப்பதாகவும் நீதிபதி ராவ் கூறினார்.
source:ptnews
0 கருத்துகள்: on "இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 31.28 மில்லியன் வழக்குகளை முடிக்க 320 ஆண்டுகள் தேவை: உயர் நீதிமன்ற நீதிபதி"
கருத்துரையிடுக