பாக்தாத்:அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பிறகு இரண்டாவது முறையாக ஈராக்கில் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.
தேர்தலின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 55 பேருக்கு காயம் ஏற்பட்டது. தலைநகரில் ஒரு வாக்குச்சாவடியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு கட்டிடங்கள் தகர்ந்து போனது. கடும் பாதுகாப்பு நிலவும் க்ரீன் சோன் உள்ளிட்ட பகுதிகளில் மோர்ட்டார் தாக்குதல்களும் நடைபெற்றன.
பாக்தாதில் வாக்குப்பதிவு குறைவாகவே இருந்தது. சில பகுதிகளில் தாக்குதல்களை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிக்கச் சென்றனர். ஈரானுடனான எல்லை மூடப்பட்டிருந்தது. சாலைகளில் வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இரண்டு லட்சம் ராணுவ வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பிரதமர் நூரி மாலிக்கி க்ரீன் சோனில் காலையில் வாக்கினை பதிவுச் செய்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைத்து மக்களும் தேர்தலில் பங்கேற்று வாக்களிக்க அவர் கோரிக்கை விடுத்தார். குர்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஏராளமானோர் வாக்களிக்க வந்திருந்தனர்.
325 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற அவைக்கு 86 வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்த 6200 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். ஆட்சியாளர்களை எதிர்க்கும் பல வேட்பாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. 1.9 கோடி வாக்காளர்கள் ஈராக்கில் உள்ளனர்.
ஏராளமான தாக்குதல்கள் நடந்த பொழுதும் 50 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இரண்டு மட்டுமே பூட்டப்பட்டதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது.
ஜோர்டான், சிரியா உள்ளிட்ட நாடுகளிலிலுள்ள வெளிநாட்டு வாழ் ஈராக் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையே வாக்களித்துள்ளனர். எந்தவொரு கட்சிக்கோ கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
தற்போதைய பிரதமர் நூரி மாலிக் ஈராக் தேசியக் கூட்டணியின் இடைக்கால பிரதமராக இருந்த இயாத் அலவி தலைமையிலான ஈராக்கியாவிடமிருந்து கடும் சவாலை சந்திக்கிறார்.
ஷியா கட்சிகளுக்கிடையிலான கருத்து வேறுபாடு தேர்தலில் முக்கிய திருப்பு முனையாகும் எனக் கருதப்படுகிறது. கடும் அமெரிக்க எதிர்ப்பாளரான முக்ததா அல் ஸதரும் ஈரான் தொலைக்காட்சி மூலமாக மக்களிடம் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக் தேர்தல் முடிவடைந்தது; தாக்குதல்களில் 38 பேர் மரணம்"
கருத்துரையிடுக