ஜாதீய அடிப்படையில் அமைந்த அதிகார கட்டமைப்பான காப் பஞ்சாயத்தின் உத்தரவின்படி திருமணம் செய்த காதல் ஜோடியை கொன்று கால்வாயில் வீசியுள்ளனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி காதல் திருமணம் செய்த கைதால் மாவட்டத்தில் கரோரா கிராமத்தைச் சார்ந்த மனோஜ்(வயது 23), பாபில்(வயது 19) ஆகியோரை கொன்ற வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார் கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி திபதி வாணி கோபால் சர்மா.

காதல் திருமணம் செய்துக் கொண்ட மனோஜும்,பாபிலும் ஒரே ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்கள். அந்த ஜாதியில் ஒரே உட்பிரிவைச் சார்ந்தவர்கள் சகோதரர்களாக கருதப்படுவது வழக்கம்.எனவே, அவர்களின் காதலுக்கு பாபிலின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி இருவரும் வீட்டைவிட்டு ஓடிச் சென்று, சண்டிகாரில் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி ரகசியத் திருமணம் செய்துக் கொண்டனர்.
இதுத் தொடர்பாக காப் பஞ்சாயத்துக் கூடியது. அதில் மனோஜ்-பாபில் காதல் திருமணம் செல்லாது என்றும் இருவரும் பிரியவேண்டும் என்றும் பஞ்சாயத்துத் தலைவர் கங்கராஜ் தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த மனோஜ், பாபில் இருவரும் போலீசாரை அணுகினர். போலீசார் அவர்களை ஜூன் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பேருந்தில் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த மனோஜ், பாபில் ஆகியோரை பாபிலின் உறவினர்கள் பேருந்திலிருந்து இறக்கி காரில் கடத்திச்சென்று, பிறகு பாபிலை விஷம் கொடுத்தும், மனோஜை கழுத்தை நெரித்தும் கொலைச் செய்தனர். இருவரின் பிணங்களையும் கை,கால்களைக் கட்டிய நிலையில் கால்வாயில் வீசியுள்ளனர். இருவரின் பிணங்களும் 23 ஆம் தேதி ஒரு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.
ஜாதீய கவுரத்துக்காக நடத்தப்பட்ட இந்தக்கொடூரக் கொலைகள் தொடர்பாக மனோஜின் தாயார் சந்தர்பதிக் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாபிலின் சகோதரர் சுரேஷ், மாமாக்கள் ராஜேந்தர், பாருராம், ஒன்றுவிட்ட சகோதரர்கள் சதீஷ், குர்தேவ், பஞ்சாயத்துத் தலைவர் கங்காராஜ், ஓட்டுநர் மந்தீ சிங் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
கர்னாலில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 25 ஆம் தேதி நீதிபதி வாணி கோபால் சர்மா 7 பேரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்தார்.
இதுத்தொடர்பாக கடந்த 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் தண்டனைத் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இது மிகவும் அரிதான வழக்கு என்றும், எனவே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும் எனவும் அரசுதரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி வாணி கோபால் சர்மா நேற்று குற்றவாளிகள் 7 பேரில் 5 பேருக்கு மரணதண்டனையும், பஞ்சாயத்துத் தலைவர் கங்காராஜுக்கு ஆயுள்தண்டனையும், ஓட்டுநர் மந்தீ சிங்குக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தார்.
ஜாதீய பஞ்சாயத்துகள் அரசியல் சட்டத்தை மீறிச்செயல்படுவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். பஞ்சாயத்து உத்தரவுக்கு எதிரான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
thejas
0 கருத்துகள்: on "சமூகக் கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்த ஜோடியை கொலைச்செய்த 5 பேருக்கு மரண தண்டனை"
கருத்துரையிடுக