31 மார்., 2010

பெருவெடிப்பு(Big bang):இரண்டாம் கட்ட சோதனை வெற்றி

ஜெனீவா:பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.ஏழு ட்ரில்லியன் எலக்ட்ரான் வால்ட் செறிவூட்டப்பட்டநிலையில் ஒளியின் வேகத்தில் சஞ்சரிக்கும் இரண்டு புரோட்டான் துகள்களை மோதவிட்டு இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றிக்கிடைத்துள்ளது.
அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம்.

இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும். இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்'(CERN), பூமிக்கடியில் 27 கி.மீ. அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் எல்.ஹெச்.சி பரிசோதனை ஆரம்பித்திருந்தாலும் இயந்திரக்கோளாருகள் காரணமாக சில தினங்களுக்குள்ளாக பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் பரிசோதனை ஆரம்பமானது.கடந்த 19 ஆம் தேதி 3.5 ட்ரில்லியன் எலக்ட்ரான் வால்ட் செறிவூட்டப்பட்டநிலையில் புரோட்டான் அணுக்களை எதிர்திசைகளில் சஞ்சரிப்பதில் விஞ்ஞானிகள் வெற்றிக்கண்டனர்.
வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இந்த வெற்றியின் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெருவெடிப்பு(Big bang):இரண்டாம் கட்ட சோதனை வெற்றி"

கருத்துரையிடுக