மார்க்க அறிஞரும், வயோதிக வயதிலும் உடல் ஊனமுற்றாலும் உள்ளம் தளராமல் சக்கர நாற்காலியில் சஞ்சரித்த ஃபலஸ்தீன் போராளிகளின் உற்றத் தலைவரும், உலக முஸ்லிம்களின் நேசத்திற்குரியவருமான ஷேக் அஹ்மத் யாஸீன் இரத்த சாட்சியம் வகித்து இன்று 6 ஆண்டுகள் நிறைவுறுகிறது.
2004 ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி ஃபஜ்ர் தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு மஸ்ஜிதிலிருந்து வெளிவரும் வேளையில் இஸ்ரேலின் ஹெலிகாப்டர் ஏவுகணைத் தாக்குதலில் இரத்தசாட்சியானார் ஷேக் அஹ்மத் யாஸீன்.
ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளுக்கு நள்ளிரவில் பிறந்த கள்ளக் குழந்தையான இஸ்ரேல் உருவாகிய துவக்க நாள் முதல் சியோனிஷ்டுகளின் தோட்டாக்களுக்கும், தடைகளுக்குமிடையே சிக்கித் தவித்த ஃபலஸ்தீன மக்களின் விடுதலைக்காக வேண்டி போராடியதுதான் ஷேக் அஹ்மத் யாஸீன் என்ற வீரமிகு போராளியைக் கொல்ல இஸ்ரேலை தூண்டியது.
தெற்கு ஃபலஸ்தீனில் அல்ஜுரா என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் ஷேக் அஹ்மத் யாஸீன் அவர்கள் 1936 ஆம் ஆண்டு பிறந்தார். சிறிய வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. 1964 இல் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் சேரும் வரை ஆசிரியராக பணியாற்றினார்.
எகிப்திற்கு சென்ற ஷேக் யாஸீன் இமாம் ஹஸனுல் பன்னாவால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பொருளாதார பிரச்சனையால் தனது படிப்பை தொடர முடியாமல் ஃபலஸ்தீனிற்கு திரும்பி வந்த ஷேக் யாஸீன் ஆசிரிய பணியை தொடரவே அல் முஜம்மா அல் இஸ்லாமி என்ற இயக்கத்தை துவக்கினார். இறுதிநாள் வரை ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் பூமி என்றும் அதனை மறுக்க எந்தவொரு ஆட்சியாளாராலும் இயலாது என்று ஷேக் யாஸீன் உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தார்.
இஸ்ரேலுக்கெதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஃபலஸ்தீன் மக்களின் மனோநிலையை புரிந்துக் கொண்ட ஷேக் யாஸீன் 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற தற்காப்பு இயக்கத்தினை உருவாக்கினார்.
1989 ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசு ஷேக் யாஸீன் மீது கொலைக்குற்றம் சுமத்தி சிறையிலடைத்தது. 1997 ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து விடுதலையானார். இஸ்ரேல் முன்வைக்கும் ஒவ்வொரு தந்திரங்களையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்திய ஷேக் யாஸீனைக் கொல்ல இஸ்ரேல் பல முறை முயற்சித்த பிறகும் அவை அனைத்தும் தோல்வியை சந்தித்தன. கடைசியில் தனது ஆயுள் முழுக்க ஃபலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட அந்த வீரமிகுப் போராளி இரத்த சாட்சியானார்.
ஃபலஸ்தீனத் தலைவர்களையும், பிஞ்சுக் குழந்தைகளையும் கிஞ்சிற்றும் மனசாட்சியில்லாமல் கூட்டுப் படுகொலைச் செய்து கொண்டாடியபிறகும் இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராக ஃபலஸ்தீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் சிறிதளவு கூட பலவீனமடையாததற்கு காரணம் ஷேக் அஹ்மத் யாஸீன் அவர்கள் ஏற்றிவைத்த எதிர்ப்புப் போராட்டத்தின் தீபமாகும்.
உடலை பலகீனப்படுத்தும் நோய்களையும்,யூத வெஞ்சிறையில் கொடிய சித்திரவதைகளையும் பொருட்படுத்தாமல் பிறந்த மண்ணிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் உயிர் நாடியாக திகழ்ந்த ஷேக் அஹ்மத் யாஸீன் அவர்கள், "நாங்கள் நெஞ்சுறுதியின் உடன்பிறப்புகள். போராட்டத்தின் தீப்பிழம்புகள் .சிதறும் தலைமுறையின் உற்ற நண்பர்கள். தன்மானத்தின் பாதுகாப்பிற்காகத்தான் போர்செய்யும் உறுதி பூண்டிருக்கிறோம்".என்ற இந்த வார்த்தைகள் எதிரிகளின் நெஞ்சங்களில் பேரிடியையும், உலக முஸ்லிம்களுக்கு உத்வேகத்தையும் அளிக்கக் கூடியதாகும்.
source:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஷேக் அஹ்மத் யாஸீன்:இரத்த சாட்சியத்தின் 6-வது ஆண்டு"
கருத்துரையிடுக