10 மார்., 2010

அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலில்: ஈரான், ஃபலஸ்தீன் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

டெல்அவீவ்:ஈரானின் மிரட்டலைக் குறித்து விவாதிப்பதற்கும், இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை ஆராய்வதற்கும் அமெரிக்க துணை அதிபர் ஜோஸஃப் பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.
அதிபர் ஷிமோன் ஃபெரஸ், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
ஃபலஸ்தீனுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேலை நிர்பந்திப்பதது தான் தனது வருகையின் முக்கிய நோக்கம் என பைடன் கூறினார்.
ஆனால் பைடன் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் ஆக்கிரமிப்பு மேற்குகரையில் புதிதாக 112 வீடுகளை கட்டுவதற்கு யூதர்களுக்கு அனுமதி வழங்கியது ஃபலஸ்தீனர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சமாதான நடவடிக்கைகளை தகர்ப்பதற்கே இஸ்ரேல் முயற்சிப்பதாக ஃபலஸ்தீன் குற்றஞ்சாட்டியுள்ளது.

நேரிடையாக இல்லாத பேச்சுவார்த்தைக்கு ஃபலஸ்தீன் சம்மதித்தது முக்கிய திருப்பு முனையாகும் என பைடன் தெரிவித்துள்ளார். பரஸ்பரம் உள்ள அவநம்பிக்கையை மாற்ற இப்பேச்சுவார்த்தை உதவும் எனவும் அவர் தெரிவித்தார். ஃபலஸ்தீன்-இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க தூதர் ஜோர்ஜ் மிச்சேல் மத்தியஸ்தராக இருப்பார்.

ஆனால் சட்டத்திற்கு புறம்பான குடியிருப்புகள் கட்டுவதற்கான இஸ்ரேலின் முயற்சி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டையாக உள்ளது. இவ்விவகாரத்தில் ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈப் எரகாத் மிச்சேலிடம் கவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடவையும் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரகுவதும், அதேவேளையில் இஸ்ரேல் கூடுதல் குடியிருப்புகளை கட்டுவதும், அதிகமான ஆக்கிரமிப்புகளை தொடர்வதும் அங்கீகரிக்க இயலாது என்று எரகாத் தெரிவித்தார்.

அணுசக்தித் திட்டத்தின் பெயரால் ஈரானின் மீது கூடுதல் பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது குறித்து பைடன் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரானுக்கெதிராக தடை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தை நிர்பந்திக்கும் ஒபாமா அரசின் முயற்சிகளுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்தார். தடையை இன்னும் வலுப்படுத்தவேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இன்று பைடன் ஃபலஸ்தீன் தலைவர்களுடன் மேற்கு கரையில் பேச்சுவார்த்தை நடத்துவார். அதற்கு பிறகு ஜோர்டானின் அப்துல்லாஹ்வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டிற்கு செல்வார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலில்: ஈரான், ஃபலஸ்தீன் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை"

கருத்துரையிடுக