15 மார்., 2010

கடும் எதிர்ப்புகளுக்கிடையே அணு விபத்து நஷ்டஈடு மசோதா!

புதுதில்லி:இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களில் விபத்து நேரிட்டால்,​​ அந்த நிலையத்துடன் இணைந்து செயல்படும் அயல்நாட்டு நிறுவனம் அதிகபட்சம் 300 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்ட ஈடு தர வேண்டியது இல்லை என்று நிர்ணயிக்கும் மசோதா மக்களவையில் திங்கள் கிழமை தாக்கலாகிறது.
விபத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் பாதிக்கபடும் இந்தியர்களுக்குத் தர வேண்டிய நஷ்ட ஈட்டு அளவை 300 கோடி ரூபாய்க்கு மேல் தேவையில்லை என்று அயல்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்தியர்களின் நலன்களுக்குப் பாதகமாகவும் கொண்டுவரப்படும் மசோதாவை இதே வடிவில் அனுமதிக்க முடியாது என்று பாரதிய ஜனதா,​​ இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

திங்கள்கிழமை மசோதா தாக்கல் செய்த உடனேயே இதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு விடவேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.​ ​இந்த மசோதாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவின் ஆதரவைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில்,​​ மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியுடன் இது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் நேரிலேயே சந்தித்துப் பேசினார்.

ஆனால் இந்த மசோதா குறித்தும் அதன் நோக்கம் குறித்தும்,​​ பாதிப்பு ஏற்பட்டால் இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய நஷ்ட ஈடு குறித்தும் அருண் ஜேட்லி கேட்ட கேள்விகளுக்கு விடை தந்த பிறகே மேற்கொண்டு பேசலாம் என்றும் தெரிவித்தார்.​ ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவுவரை அருண் ஜேட்லியின் எந்தக் கேள்விக்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலகர்த்தா என்று கூறப்படும் அணுவிசை கமிஷன் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் இந்த 300 கோடி ரூபாய் வரம்பு நியாயமான அளவுதான் என்று கூறுகிறார்.

இந்தியர்களின் நலன்களுக்கு எதிரானது,​​ வெளிநாட்டு அணுவிசை நிறுவனங்களுக்குச் சாதகமானது என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொள்ளக்கூடிய இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவிலேயே நிறைவேற்றிவிட வேண்டும் என்று அரசுத்தரப்பில் நினைக்கின்றனர். 300 கோடி ரூபாய் என்று நிர்ணயித்தது ஏன் என்று கேட்டதற்கு,​​ இதைவிடக் குறைந்த அளவை வெளிநாட்டு நிறுவனங்கள் தந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த அளவை நிர்ணயித்ததாக ககோட்கர் கூறினார்.​ இது குறைந்தபட்ச அளவு இல்லையே அதிகபட்ச அளவாயிற்றே,​​ இதற்கும் மேல் அவர்கள் தர வேண்டாம் என்று கூறுவது எப்படி இந்தியர்களின் நலனுக்கானது என்று கேட்டபோது அவரிடம் பதில் இல்லை.

அணுசக்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு பெற இதுவரை தனி அமைப்பு ஏதும் இல்லை என்பதால் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்றும் இப்போதுள்ள இன்சூரன்ஸ் சட்டத்தில் அதற்கு வழி இல்லை என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்.​ அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திக்கவிருக்கிறார்.​ அப்போது,​​ இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்து இந்தியா எடுத்திருக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஒபாமா கேள்விகள் கேட்பார்.​ அப்போது பதில் சொல்வதற்காகத்தான் இந்த மசோதா என்று கூறப்படுகிறது.​ விபத்து நடந்த தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் மனுச் செய்தால்தான் நஷ்ட ஈடு பெற முடியும் என்று மசோதாவின் ஒரு பிரிவு கூறுகிறது.

அணு கதிரியக்கப் பொருள் திருடப்பட்டோ,யாருக்கும் தெரியாமல் தூக்கி வீசப்பட்டோ,​​ கவனக்குறைவாக கைவிடப்பட்டோ சேதம் ஏற்பட்டால்,​​ அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தத் தேதியிலிருந்து அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்குள் நஷ்ட ஈடு கோரலாம் என்று மற்றொரு பிரிவு கூறுகிறது. நஷ்ட ஈட்டு அளவைக் கூட்டவும் குறைக்கவும் அரசுக்கு அதிகாரம் தருகிறது மசோதாவின் மற்றொரு பிரிவு.

அணுசக்தி தயாரிப்பு நிலையத்தில் விபத்து நேரிட்டு அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு இவ்வளவுதான் நஷ்ட ஈடு என்று நிர்ணயிப்பது அடிப்படை மனித உரிமைகளையே மீறும் செயல் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டிக்கின்றனர்.இந்திய அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே வரம்பு கட்டுவதாக இருக்கிறது இந்தப் பிரிவு,​​ எனவே இது செல்லாது என்கிறார் சட்ட மேதை சோலி சோரப்ஜி.

புயல்,​​ வெள்ளம்,​​ நில நடுக்கம்,​​ ஆழிப்பேரலை ​(சுனாமி), காட்டுத் தீ போன்ற இயற்கைக் காரணங்களால் அணுசக்தி உற்பத்தி நிலையத்தில் விபத்து நேரிட்டாலோ,எதிரி நாட்டுடன் நடக்கும்போரின்போது தாக்கப்பட்டாலோ,பயங்கரவாதிகளின் தாக்குதலால் விபத்து நேரிட்டாலோ,​​ அணுசக்தி நிலையத்தில் பணிபுரிகிறவரின் கவனக்குறைவான நடத்தையாலோ விபத்து நேரிட்டால் இந்த நிலையத்துடன் இணைந்து பணிபுரியும் வெளிநாட்டு நிறுவனம் நஷ்ட ஈடே தரத் தேவையில்லை என்று ஒரு பிரிவு தெரிவிக்கிறது.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கடும் எதிர்ப்புகளுக்கிடையே அணு விபத்து நஷ்டஈடு மசோதா!"

கருத்துரையிடுக