மகளிர் மசோதா ஒரு சர்வதேச சதி என்று சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பேட்டியளித்த முலாயம் சிங் யாதவ் கூறியதாவது: "நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மூலம் ஆண்களையும் குறிப்பாக முஸ்லிம்களையும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க திட்டமிட்ட முயற்சி நடக்கிறது.
இது ஒரு சர்வதேச சதி. இந்த சதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டே பங்கு கொண்டுள்ளது. மகளிர் மசோதா மூலம் 3 தேர்தல்களுக்குப் பிறகு ஆண்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கணிசமாக குறையும். மகளிர் இடஒதுக்கீடு சுழற்சி முறையில் அமல்படுத்தப்படுவதால் எல்லா தொகுதிகளிலும் ஆண்கள் எண்ணிக்கை குறைந்து விடும். 3 தேர்தல்களுக்கு பின் புகழ்பெற்ற நாடாளுமன்றவாதிகள் வெளியேறினால் அது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே கேடு விளைவிக்கும்.
மகளிர் மசோதா விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜ.வும் ஒன்றாக கைகோர்த்துள்ளன. நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சதி செய்கின்றன.
ஏற்கனவே, 1977, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசில் முஸ்லிம்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில், மத்தியப் பிரதேசம், அரியானா, டெல்லி உட்பட சில மாநிலங்களில் ஒரு முஸ்லிம்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. மகளிர் மசோதா அமலானால், முஸ்லிம்கள் நாடாளுமன்றத்துக்கே வர முடியாது"என்றார்.
source:dinakaran
0 கருத்துகள்: on "மகளிர் மசோதா சர்வதேச சதி: முலாயம் சிங்"
கருத்துரையிடுக