காஸ்ஸா:இஸ்ரேல் ராணுவம் ஃபலஸ்தீன் சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. ஃபலஸ்தீன் எல்லை நகரான ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் இந்த மரணம் நிகழ்ந்தது.
முஹம்மது அல் ஃபரமாவி என்ற 15 வயது சிறுவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக காஸ்ஸாவின் அவசர படைப்பிரிவு தலைவர் முஆவியா ஹுசைன் தெரிவித்தார்.
யாஸிர் அரஃபாத் விமானநிலையத்தின் அருகில் நடந்துச் செல்லும் பொழுது இச்சிறுவனை இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவர சூழல் ஏற்பட்டுள்ளதால் இறந்த உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை.
காஸ்ஸாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இஸ்ரேல் ராணுவம் ஹமாஸின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக ஃபலஸ்தீனர்களை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கிடையே, காஸ்ஸாவில் மக்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் விதமாக காஸ்ஸாவின் எல்லா எல்லைகளையும் இஸ்ரேல் மூடியுள்ளது. ஆறு எல்லைகள் காஸ்ஸாவில் உள்ளது. வெளி உலகத்துடன் தொடர்புக் கொள்ளவும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் இந்த எல்லைகளைத் தான் ஃபலஸ்தீனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு வாரம் தொடரும் யூதத் திருநாள் கொண்டாட்டத்திற்காகத்தான் எல்லைகளை மூடியதாக இஸ்ரேல் கூறினாலும் இஸ்ரேலின் இந்தச் செயல் ஃபலஸ்தீனர்களுக்கெதிரான மோசமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
எல்லைகளை மூடுவதற்கு முன் காஸ்ஸாவிற்குள் கொண்டுச் செல்லும் உணவுப் பொருட்களின் அளவையும் இஸ்ரேல் குறைத்திருந்தது. தடை ஏற்படுத்தியதோடு காஸ்ஸாவின் எல்லைகளையும் மூடியது சர்வதேச சட்டங்களை மீறியச்செயல் என ஃபலஸ்தீனின் அரசியல் பார்வையாளர் ஹல்தர் ஹல்த் கூறுகிறார்.
காஸ்ஸாவின் ஏழாவது எல்லைப் பகுதி எகிப்தின் வசம் உள்ளது. இது ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. யூதர்களின் பஸோவர் கொண்டாட்டத்தின் காரணமாக மேற்குக்கரையிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த திங்கள் கிழமை வரை எல்லைகள் மூடப்படும்.மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் சிறுவனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்"
கருத்துரையிடுக