31 மார்., 2010

நீரழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி வேண்டாம் இனி வருகிறது இன்ஹேலர்

டயபடீஸ் நோயாளிகள் (நீரழிவு நோய்) இனி, வலி தரும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்காது. இன்ஹேலர் வடிவில் இன்சுலின் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேன்கைண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், 'அப்ரீசா' என்ற பெயரில் இன்சுலின் இன்ஹேலரைத் தயாரித்துள்ளது.

அது பற்றி அந்நிறுவன ஆராய்ச்சிக் குழுத் தலைவர் ஆண்ட்ரியா லியோன் பே கூறியதாவது:
நீரழிவு நோயாளிகள் அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது கொடுமையாகும். அவர்களுக்கு இனி எளிய மருத்துவம் கிடைக்கப் போகிறது. அப்ரீசா இன்ஹேலர், வழக்கமான இன்சுலின் ஊசியை விட வேகமாக செயல்படக் கூடியது. ரத்தத்தில் சர்க்கரை அளவை நார்மலாக உடனடியாக மாற்றக் கூடியது. அதேநேரம், சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறையக்கூடிய ஆபத்து இல்லாதது.

இந்த இன்ஹேலரில் டெக்னோஸ் பியர் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாய் மூலம் உள்ளிழுக்கப்படும் இன்சுலின் பவுடர், நுரையீரலுக்கு சென்று உடனடியாக ரத்தத்தில் கலக்கும். உடனடியாக செயல்படத் தொடங்கும். இன்ஹேலரை உறிஞ்சிய 12 நிமிடங்களில் நோயாளிக்கு நிம்மதி கிடைக்கும். அதேபோல, இன்சுலின் ஊசி ரத்தத்தில் செயல்படுவதைவிட கூடுதல் நேரம் செயல்படும்.

அப்ரீசா இன்ஹேலர் இப்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது. அது கிடைத்ததும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்றார். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் இன்ஹேலர் அறிமுகமாவதை மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

அமெரிக்க டயபடீஸ் ஆராய்ச்சி பவுண்டேஷன் இயக்குனர் சஞ்சய் தத்தா கூறுகையில், "அப்ரீசா தயாரிப்பில் தேவையான பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் நோயாளிக்கு பக்கவிளைவுகள் ஏதும் இருக்காது என்று நம்புகிறோம். இன்சுலின் ஊசியைவிட இன்ஹேலர் பயன்படுத்துவது டயபடீஸ் நோயாளிகளுக்கு எளிதாக இருக்கும்" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நீரழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி வேண்டாம் இனி வருகிறது இன்ஹேலர்"

கருத்துரையிடுக