கூடுவாஞ்சேரி:சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மாமூல் கொடுக்காததால் முஸ்லிம் இளைஞரை படுகொலை செய்துள்ளது ஒரு ரவுடிக் கும்பல்.
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையை சேர்ந்தவர் நிஜாம் முகைதீன். இவரது மகன் இப்ராகிம் என்கிற அப்பாஸ் (23). திருமணம் ஆகாதவர். ஜூஸ் கடை நடத்தி வந்தார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி அருண் குமார் என்பவனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு அப்பாஸ் பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது அருண்குமார் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்ததில் அப்பாஸ் அந்தஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்த ராஜன், பூபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை நடந்த 3 மணி நேரத்தில் அருண்குமார் அவனது கூட்டாளிகள் சரவணன், பிரசன்னா, செல்வமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மாமூல் கொடுக்க அப்பாஸ் மறுத்ததே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரவுடியின் தந்தை ஜார்ஜ் கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் துணைத் தலைவர் ஆவார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "மாமூல் கொடுக்காததால் முஸ்லிம் இளைஞர் படுகொலை"
கருத்துரையிடுக