ஜெருசலம்:மஸ்ஜிதுல் அக்ஸாவின் சுற்றுப்புறத்தில் யூத ஆலயம் மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி கிழக்கு ஜெருசலமில் ஃபலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய போலீஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
ஹூர்வா யூத ஆலயம் திறப்பதற்கெதிராக ஹமாஸ் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தது. ஸுப்பத்திலும், ஈஸவ்வியாவிலும் ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேல் போலீஸுக்கெதிராக கல்வீச்சில் ஈடுபட்டனர். பதிலடியாக இஸ்ரேல் போலீஸ் கிரேனேடுகள் பயன்படுத்தி 15 ஃபலஸ்தீனர்களை கைதுச்செய்துள்ளது.
ஹமாஸின் எதிர்ப்பை சந்திக்க ஜெருசலத்திலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் இஸ்ரேல் 3000 போலீஸாரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. 62 வருடத்தில் முதல்முறையாக ஹூர்வா ஆலயம் திறக்கப்படுகிறது. மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து 700 மீட்டர் தூரத்திலிருக்கும் ஹூர்வா மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்ப்பதற்காக யூதச் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என முஸ்லிம்கள் கருதுகிறார்கள்.
ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல் கடந்த திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார். ஹூர்வா ஆலயம் புனர் நிர்மாணிப்பது அல் அக்ஸா மஸ்ஜிதை தகர்ப்பதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என அவர் கூறியிருந்தார். அல் அக்ஸாவை தகர்ப்பதிலிருந்தும், யூதமயமாக்கலிருந்தும் பாதுகாக்க முன்வர ஜெருசலத்திலிலுள்ள முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். இப்பகுதி முழுவதும் வெடித்து சிதறவைக்கும் தீயைக்கொண்டு இஸ்ரேல் விளையாடுவதாக மிஷ்அல் எச்சரித்தார்.
உலக முஸ்லிம்களின் 3-வது சிறப்புமிக்க புண்ணியஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நுழைய இஸ்ரேல் ஐந்தாவது நாளாக தடை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளது.
1694 ஆம் ஆண்டுதான் ஹூர்வா ஆலயம் முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் 1721-லும், 1948 ஆம் ஆண்டு அரப்-இஸ்ரேல் போரின் போதும் அது தகர்க்கப்பட்டிருந்தது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குகரையில் இரண்டு யூத மத மையங்கள் நிர்மாணிப்பதை யூத தேசிய சிறப்புத்திட்டத்தில் உட்படுத்துவதற்கான இஸ்ரேலின் திட்டத்திற்கெதிராக சமீபத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
ஃபலஸ்தீன் மண்ணில் சட்டத்திற்கு புறம்பான குடியேற்ற வீடுகள் நிர்மாணிப்பதற்கான முயற்சியும் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் மோதலுக்கு வழிவகுத்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்க்க இஸ்ரேல் முயற்சி: ஹமாஸ் எச்சரிக்கை"
கருத்துரையிடுக