திரிபோலி:குடியேற்ற நிர்மாணங்களை நிறுத்தாமல் இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஃபலஸ்தீன் அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறினார்.
லிபியாவில் நடந்த அரப் லீக் உச்சி மாநாட்டில் இந்த தீர்மானத்தை அப்பாஸ் அறிவித்தார்.ஜெருசலத்திலும் மேற்கு கரையிலும் குடியேற்ற நிர்மாணங்களை நிறுத்திவிட்டு பழைய நிலையை (status quo) தொடரவேண்டும் எனவும் அவர் கூறினார்.
அமெரிக்கா மத்தியஸ்தராக பங்கேற்கும் ஃபலஸ்தீன் இஸ்ரேல் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பொழுதுதான் இஸ்ரேல் 1600 புதிய குடியேற்ற நிர்மாணங்களை கட்டப்போவதாக அறிவிப்பை வெளியிட்டது. இது பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக மாறியது.
குடியேற்ற நிர்மாணத் திட்டத்தை கைவிடப்போவதில்லை என இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து தான் அப்பாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குடியேற்ற நிர்மாணத்தை நிறுத்தவேண்டும் என்ற அப்பாஸின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கமுடியாது என்று கூறியுள்ளது. ஜெருசலத்தில் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என துணை பாதுகாப்பு அமைச்சர் தானி அய்லோன் தெரிவித்தார்.
எல்லைப் பகுதியில் வசிக்கும் ஃபலஸ்தீனர்களை ஃபலஸ்தீன் அதாரிட்டி மாற்றவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், இஸ்ரேலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் அரப் லீக் உச்சிமாநாடு முடிவுற்றது. சமாதான பேச்சுவார்த்தையில் ஃபலஸ்தீன் பங்கேற்குமா என்ற பிரச்சனையில் ஏகமனதான முடிவு எடுக்கப்படவில்லை.
குடியேற்ற நிர்மாணத்திற்கெதிராக இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுமென்றும், சமாதான பேச்சுவார்த்தையை புறக்கணிக்க வேண்டுமென்றும் சிரியாவும், லிபியாவும் தெரிவித்த கருத்துக்களை பெரும்பாலான அரபுநாடுகளின் உறுப்பினர்கள் அங்கீகரிக்கவில்லை.
ஆனால் சமாதான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல்தான் முடிவெடுக்கவேண்டுமென்றும், குடியேற்றத்தைக் குறித்த அவர்களுடைய தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அரப் லீக் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குடியேற்ற நிர்மாணத்தை நிறுத்தாமல் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - மஹ்மூத் அப்பாஸ்"
கருத்துரையிடுக