டெல்லி:வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு குடியேறல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த சட்டத்திருத்த மசோதா அறிமுகமாகும் என தெரிகிறது.
வெளிநாட்டு வேலைக்காக பல்வேறு வழிமுறைகளில் செல்லும் இந்தியர்கள் இடைத் தரகர்களாலும், சில தவறான நிறுவனங்களாலும் ஏமாற்றப்படுவது அடிக்கடி நடக்கிறது. வேலை தருவதாகக் கூறி பணம் பெற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் சில இடைத் தரகர்கள் அலைய விடுவதும், பல்வேறு காரணங்களுக்காக சில நிறுவனங்கள் வேலை செய்யும் இந்தியர்களின் பாஸ்போர்ட் ஆவணங்களை பிடுங்கி வைத்துக் கொள்வதும் நடக்கிறது.ஏராளமான இந்தியர்கள் இதுபோன்ற விவகாரங்களில் சிக்கி பாதிக்கப்படுவதாக மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக மலேசியா, வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய பணியாளர்கள் மத்தியில் இதுபோன்ற புகார்கள் நிறைய வருவதுண்டு. இது போன்ற அசௌகரியங்களை தடுக்க இந்திய குடியேறல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1983ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியேறல் சட்டத்தை தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு வழங்க வழி செய்யும் ஷரத்துக்களை சேர்த்து இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இச்சட்டத்திருத்த மசோதா ஏற்கனவே தயார் செய்யப்பட்டு பல்வேறு அமைச்சகங்களுக்கும் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி குறிப்பிடுகையில், "நமது குடியேறல் சட்டம் 26 ஆண்டுகளுக்கு முந்தையது. தற்போது உலகம் வேறு மாதிரி மாறிப்போய்விட்டது. இன்றைய நிலையில் ஏற்படுகிற பிரச்னைகளை சமாளிக்கும் வகையிலும், தேவைகளை நிறைவு செய்யும் விதத்திலும் சட்டம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய சட்டத்தின் பிரதான அம்சமாக குடியேறல் ஆணையம் ஒன்று உருவாக்கப்படும். வெளிநாடுகளுக்கு குடியேறுவோர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள், போக்குவரத்து மற்றும் செயல்பாடுகளை இந்த ஆணையம் கண்காணிக்கும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் குடியேறல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படும்.வெளிநாடுகளில் இந்தியர்களை மோசடி செய்யும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரமும் இந்த ஆணையத்துக்கு வழங்கப்படும்.
புதிய சட்டத்தின் படி, குறிப்பிட்ட வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். குறிப்பாக வளைகுடா நாடுகள், மலேசியா உள்ளிட்ட 18 நாடுகள் இதற்கென பட்டியலிடப்பட்டுள்ளன."என்றார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க புதிய குடியேறல் சட்டம் விரைவில் அறிமுகம்: மத்திய அமைச்சர்"
கருத்துரையிடுக