21 மார்., 2010

குஜராத் கலவர வழக்கு -சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மோடி ஆஜராகவில்லை

அகமதாபாத்:குஜராத் கலவர வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்ட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகவில்லை.

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் எம்பி இஹ்ஷான் ஜாஃப்ரி உட்பட 70 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்களின் தூண்டுதல் காரணமாகவே இந்த கொடூரம் நிகழ்ந்தகாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே மோடி, பல்வேறு அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட 62 பேர் மீது வழக்கு தொடர வேண்டும் என கலவரத்தில் பலியான இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய குஜராத் டிஜிபியிடம் புகார் அளித்தார்.

ஆனால் இந்தப் புகார் பதிவு செய்யப்படவில்லை. இதனால், கடந்த 2007ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நிவாரணம் கோருவதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி குஜராத் உயர்நீதிமன்றமும் மனுவை நிராகரித்து விட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஸாக்கியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நரேந்திரமோடியுடன் 62 பேரை வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும், கலவர சம்பவம் தொடர்பான உண்மைகள் மூடி மறைக்கப்படாமல் இருக்க இவ்விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதன் படி சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை கடந்த ஆண்டில் தொடங்கியது. ஸாக்கியா புகாரில் தெரிவித்துள்ள நபர்கள் உட்பட பல்வேறு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துகொண்டது.

முன்னாள் உள்துறை அமைச்சர் கோர்தன் சடாஃபியா, பாஜ தலைவர் ஐ.கே.ஜடேஜா, முன்னாள் எம்எல்ஏ லுனாவடா கலு மிலவாத் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், சமூக போராளிகள், போலீஸ் உயரதிகாரிகள் என பலரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

ஸாக்கியா தனது மனுவில் குற்றம்சாட்டியதன் அடிப்படையில் முதல்வர் நரேந்திர மோடியிடமும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டது.

இதன் படி இன்று (மார்ச் 21) குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சிறப்பு புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடந்த 11ம் தேதியே சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் இதற்கான சம்மன் மோடிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் சம்மனை ஏற்று, விசாரணைக்கு இதுவரை மோடி ஆஜராகவில்லை.

முதல்வர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து எந்தவிதமான தகவலும் இல்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் ஆர்.கே.ராகவன் தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத் கலவர வழக்கு -சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மோடி ஆஜராகவில்லை"

கருத்துரையிடுக