22 மார்., 2010

உலக தண்ணீர் தினம்

உலகம் முழுவதும் தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டிற்கான தண்ணீர் தின முழக்கமாக "ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்" என அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கடைப்பிடிக்கத் துவங்கி பல்வேறு தலைப்புகளில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த முழக்கங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு தண்ணீரைக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் தன்னார்வலர்களும் ஐ.நாவின் துணை அமைப்புகளின் பணியாளர்களும் உலக முழுவதும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். ஆண்டுக்கொரு முறை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபடுவதிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கடைபிடிப்பதிலோ எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஏனெனில் ஆண்டுதோறும் தண்ணீர் தேவையின் அதிகரிப்பு ஒரு புறம் அதிகரிக்கும் சூழலில் தூய்மையான தண்ணீரின் தட்டுப்பாடும் அதிகரிக்கவேச் செய்கின்றது.

பூமி பரப்பில் நீரின் இருப்பு 97 விழுக்காடாக அமைந்திருந்தாலும், பயன்படத்தக்க நீரின் அளவு 0.26 விழுக்காடு என்ற மிக சொற்ப அளவாகவே உள்ளது. தண்ணீரின் பயன்பாடு மற்றும் தூய்மையை பாதுகாத்தல் போன்றவற்றில் நாடுகளை ஆளும் அரசுகளும், பொதுமக்களும் அதி முக்கியத்துவம் அளித்தாலன்றி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவியலாது என்பதுதான் உண்மை. மனித சமூகம் ஏற்படுத்தும் கெடுதிகளால் இன்று தண்ணீரின் தன்மை மாசுபட்டு மனித சமூகம் பெரும் அபாயத்தை நோக்கி நிற்கிறது.

நீர் நிலைகளையும், குளங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் ஏற்பட்ட உவகை இன்று எங்கே போனது? கரை புரண்டு தண்ணீர் ஓடும் நதிகளை பார்ப்பது அரிதாக மாறிவருகிறது. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. வருங்காலம் தண்ணீருக்காக மனித இனம் போராட போகும் காலம். போராட்டத்தின் சிறு பகுதியை கொஞ்ச காலமாகவே தமிழகம் காவிரி மற்றும் முல்லைப் பெரியார் பங்கீட்டில் அனுபவித்து வருகிறது. எவ்வளவு பொருள், உயிர் இழப்பு, பரஸ்பரம் வெறுப்பு, வேலை நிறுத்தம், நீதிமன்றம், சட்டம் என மனித உழைப்பு வீணாவது என்று கணக்கிட்டால் ரூபாய் மதிப்பில் பல கோடிகளைத் தாண்டும்.

தண்ணீருக்காக சமூகத்தின் ஒரு பகுதியினர் அல்லலுறும் பொழுது இன்னொரு பகுதி தண்ணீரை விரையம் செய்வதிலும், மாசுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் கொடுமை நிகழ்ந்தேறுகிறது. பணக்கார நாடுகள் எந்தவொரு பொறுப்புணர்ச்சியின்றி கழிவுகளை ஆப்பிரிக்க கடல் பகுதிகளில் கொட்டி அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்பினால் கொதிப்படைந்த ஒருபிரிவினர் இன்று சோமாலியா கொள்ளையர்களாக மாறிவிட்டனர்.

கடல்,ஆறு,குளம்,குட்டை,கிணறு என எல்லாவிதத் தண்ணீர் நிலைகளும் மாசுபடுத்தப்பட்டே வருகின்றன. தண்ணீர் மனிதனைப் படைத்த வல்ல இறைவனின் அருட்கொடைகளில் மகத்தானது. இறைவன் கூறுகிறான்:

"உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11),
(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம்."(அல்ஃபுர்கான், 25:48)
இறைவனின் பரிசுத்தமாக இறக்கிவைத்த தண்ணீரை மாசுபடுத்தி சீரழிக்கும் மனித சமூகத்தினை என்னவென்று கூறுவது? இன்று எந்தத் தண்ணீர் இறைவனது அருட்கொடையோ அதனை இன்று மனித வாழ்வை சீரழிக்கும் சாராய மதுபான வகைகளுக்கு பயன்பத்தும் இழிநிலைக்கு மனித சமூகம் சென்றுவிட்டது. தண்ணி பார்ட்டி, தண்ணி போட்டிருக்கான் என்ற வார்த்தைகளை சர்வசாதாரணமாக பயன்படுத்தும் அவல நிலையை நாம் காணத்தான் செய்கிறோம்.

நமது இந்திய தேசம் உலகின் இரண்டாவது, மக்கள் தொகை அதிகமான நாடு. ஆனால் இங்கே 200 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. இது அமெரிக்க மக்கள் தொகையை விட 2 1/2 மடங்கு அதிகம். இந்தியாவில் பரவும் தொற்றுநோய்களில் 21% தண்ணீர் மூலம் பரவுபவை. ஆண்டுதோறும் டயோரியா நோயால் மட்டும் 7,00,000 இந்தியர்கள் இறக்கின்றனர். ஆய்வுகள் கூறும் உண்மைகள் இவை.நம் நீர்நிலைகளும், நிலத்தடிநீரும் மாசுபட்டு கொண்டிருக்கும் அவலங்கள் நமக்கே தெரியும். இந்த 50 வருடங்களில் பெருகிவிட்ட தொழிற்சாலைகள், இவற்றின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்க படாமல் , நேரிடையாக கலப்பதால், நீர்நிலைகளும், வயல்களுக்கு இடப்படும் இராசயன உரங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றால் நிலத்தடி நீரும் பெருமளவு மாசுபட்டு போகின்றன.

இந்தியா அழகான பல நதிகள் நிறைந்த நாடு. நதிகளை தாயாய் தெய்வமாய் போற்றுவதாக ஒரு மதத்தவர் கூறுகின்றனர். ஆனால் மதத்தின் பெயரால் தண்ணீரை மாசுபடுத்தி அழுக்கு நீராக்கும் பணியைத்தான் அவர்களில் ஒருசாரார் செய்து வருகின்றனர். இந்தியாவின் அதிமுக்கிய நதியான கங்கையின் இன்றைய நிலை என்ன? உலகின் மிக அழுக்கான நதிகளில் ஒன்றாக மாறிவிட்டது. கங்கா ஜலம் என்றால் புனிதம் என்றார்கள் ஆனால் புனிதம் என்பது போய், குளித்தால் தோல் நோய்கள் வரும் அளவுக்கு தகுதியற்றது ஆகிவிட்டது. இரசாயன கழிவுகள், ப்ளாஸ்டிக் குப்பைகள், அதிக அளவு சுற்றுலா பயணிகள் உபயோகித்தல், இவை போதாதென்று, இறந்தவர்களின் சடலங்களை `ஜலசமாதி’ செய்யும் மூடநம்பிக்கைகள், இவை அனைத்தும் சேர்ந்து ஒரு அழகான நதியை அழுக்காக்கி விட்டது. யமுனை உள்ளிட்ட பல நதிகளுக்கும் இதே கதிதான்.

விநாயகர் சிலை விஜர்சனம் என்ற பெயரில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்ற உலோக கலவையால் செய்யப்பட்ட சிலைகளை கடலில் கரைத்து அதன்மூலம் கடலில் வாழும் மீன்களுக்கும் அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் நாசத்தை விளைவிக்கின்றனர் ஒரு சாரார். ஆனால் அரசோ இதனையெல்லாம் கண்டும் காணாமல் உள்ளது. ஒரு புறம் மதவாதிகளால் என்றால் இன்னொருபுறம் மத்தியில் ஆளும் அரசுகளின் உலகமயமாக்கல் போன்ற இறையாண்மைக்கு உலைவைக்கும் கொள்கைகளால் தண்ணீரின் தன்மை மாசுபடுத்தப்பட்டு வருகிறது.


நமது முக்கியமான நீராதாரம் நிலத்தடி நீராகும். விவசாயம், நமது அன்றாட தேவைகளுக்கு நிலத்தடி நீரையே உறிஞ்சுகிறோம். அதிக பயன்பாடு, போதிய மழையின்மை, இவற்றோடு` கோகோ கோலா போன்ற ஏகாதிபத்திய அந்நிய நாட்டு கம்பெனிகளும் நிலத்தடி நீர்வறட்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கம்பெனிக்கு இந்தியா முழுமையும், 52 பாட்டிலிங் மையங்கள் உள்ளன.

கேரளாவில் இதன் காரணமாகவே,`பிளாச்சிமேடு’என்னும் கிராமம் நிலத்தடி நீரையிழந்து விட்டதும், அங்கு டிரக்குகள் மூலம் குடிநீர் விநியோகிக்க படும் அவலமும் தெரிய வந்துள்ளது. `கோக் குடிப்பது ஒரு இந்திய விவசாயியின் இரத்தத்தை குடிப்பதற்கு ஒப்பானது’ என்றெல்லாம் கூறப்பட்டாலும், விற்பனை அமோகமாக தான் உள்ளது.

இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் அறிவியல் மையம், கோக், பெப்சி முதலான மென் பானங்களை பரிசோதித்த பின் வெளியிட்ட தகவல்,'இவை மூன்று அல்லது ஐந்து வகை பூச்சிகொல்லிகள் கலந்த காக்டெய்ல்' என்பது தான். அவ்வப்போது கரப்பான், பல்லி இவற்றின் உடல்களை பாதுகாக்கும் ஃபார்மலின் திரவமாகவும் செயல் படுகிறது. பத்து நாட்கள் சர்ச்சைகள், அடங்கியபின், மறுபடி விற்பனை முன்னைப் போலவே...

கேடு பயக்கும் என தெரிந்தும், இதன் கவர்ச்சி விளம்பரங்களில் மயங்கி நாமும் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு இணையான, நம் நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த நாம் தயங்குவதால் உள்நாட்டு குளிர்பானக் கம்பெனிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படுகின்ற அவல நிலையும் நிகழ்கிறது.

எனவே இதுத்தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும். தண்ணீரை வீண்விரயம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமது சுற்றுப்புற சூழலை மாசுப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராகவும், அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு நமது தண்ணீரை தாரைவார்த்துக் கொடுப்பதற்கு எதிராகவும் போராட முன்வரவேண்டும். நமது தேவை போக மீதமான தண்ணீரை பிறருக்கு கொடுக்கும் மனோநிலையும் நமக்கு வரவேண்டும். இத்தகையதொரு மாற்றம் வராமல் தண்ணீருக்காக கண்ணீர் சிந்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் (இறைவன்) நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலக தண்ணீர் தினம்"

கருத்துரையிடுக