அமெரிக்காவின் ஆலோசனைக்கு அடிபணிந்து இஸ்ரேலுடன் மறைமுக பேச்சுவார்த்தைக்கு அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரப் லீக்கின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஃபலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதுள்ள சூழலில் ஃபலஸ்தீன்-இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்வது இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் அதேவேளையில் சட்டத்திற்கு புறம்பான திட்டங்களுக்கும், சட்டமீறுதலுக்குமே வழி வகுக்கும். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமைதியில் நம்பிக்கையில்லை. மேலும் ஜெருசலம்-அல் குத்ஸ் பிரச்சனையிலோ அல்லது ஃபலஸ்தீன அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான உரிமையிலோ விருப்பமில்லை."
மேலும் ஹமாஸ் டெல் அவீவ் தொடர்ந்து ராணுவத் தாக்குதல்களையும், குடியேற்ற நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்க்கொண்டு வரும் சூழலில் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு அரப் லீக்கின் ஆதரவை பெற முயற்சி எடுத்த ஃபலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் நடவடிக்கையை விமர்சித்துள்ளது.
மஹ்மூத் அப்பாஸின் செயல் அமெரிக்க நிர்வாகத்திற்கு அடிபணிவதாகும். மஹ்மூத் அப்பாஸ் ஃபலஸ்தீன-இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக்கு உயிரூட்டியதன் நோக்கம் வாஷிங்டனின் உதவியை அடைவதற்காகும்.
கடந்த புதன்கிழமை கெய்ரோவில் கூடிய அரபு லீக்கில் இடம் பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது என்றும் அதற்கு அமெரிக்கா நடுவராக செயல்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் சிரியா கூறுகையில், அரப் லீக்கின் அமைச்சர்களின் முடிவு ஒத்த கருத்தை அடையமுடியவில்லை என்றும் இது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஃபலஸ்தீன் குறித்த முடிவுக்கு அரசியல் போர்வையை போர்த்துவதாகும் என்றும் கூறியுள்ளது.
செய்தி:presstv
0 கருத்துகள்: on "இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைக்கு முடிவு: அரப் லீக்குக்கு ஹமாஸ் கடும் கண்டனம்"
கருத்துரையிடுக