காங்கிரஸ் எதிர்பார்ப்பது போல் காரியங்கள் நடந்தால் மத்திய அரசு சர்ச்சைக்குரிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து ஒரு விவாதமும் இல்லாமல் வெற்றி பெறவும் செய்யும்.
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும் எல்லா பிரச்சனைகளிலும் வேட்டை நாய்களைப்போல் பரஸ்பரம் கடித்துக் குதறும் பாரதீய ஜனதா கட்சியும், இரு கம்யூனிஸ்டுகளும் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஒன்றுபட்டு தங்களது ஆதரவை காங்கிரஸுக்கு அறிவித்துள்ளன.
சில சிறிய "புரட்சி" கட்சிகளும் உறுதுணையாக உள்ளன. முஸ்லிம்களும், தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட மக்களும் உள்ளிட்ட பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான கட்சிகள் மாநிலங்களவையில் ரகளை ஏற்படுத்தாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடுதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படப் போகிறது.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட உடனேயே வாக்கெடுப்பு நடத்தி ஆதரிப்பவர்கள் தங்களது சம்மதத்தை தெரிவிக்கும் முகமாக பொத்தானை அழுத்தச் செய்யவும் முயற்சி நடைபெறுகிறது. அதற்கு கட்சிகள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கவும் செய்வார்கள்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளமோ, சமாஜ்வாதி கட்சியோ, முஸ்லீம் கட்சிகளோ எதிரல்ல என்பதுதான் இந்த ஜனநாயக நாடகத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்.
இன்றைய அரசியலில் முக்கிய அரசியல் கட்சிகளில் முக்கிய பதவிகளை வகிக்கும் பெண்கள் பெரும்பாலும் உயர் ஜாதி வர்க்கத்தினரும், நகரவாசிகளுமாவார்கள். மூன்றில் ஒரு பகுதி இடங்களை மகளிருக்கு ஒதுக்கிவைப்பதன் மூலம் மேல்ஜாதி வர்க்கத்தினரின் ஜனநாயகத்திற்கெதிரான ஆதிக்கம் உறுதிப்படுத்தப்படும்.
மகளிரின் இடஒதுக்கீட்டிற்காக வாதாடும் கம்யூனிஸ்டுகள் உள்பட எந்தவொரு கட்சியும் தீர்மானம் எடுக்கும் சபைகளில் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் இதுவரை அளித்ததில்லை. மக்கள் பிரதிநிதிகள் விஷயத்திலும் இதுதான் நிலைமை. எல்லா இடஒதுக்கீட்டு சட்டங்களையும் புறவாசல் வழியாக வைரஸை செலுத்தி அழித்தொழிப்பதற்கும் தயங்காத யோக்கியவான்கள் நீதிபீடங்களிலும், இதர அரசியல் அதிகார மட்டங்களிலும் நடத்திவரும் முயற்சிகளை குறித்து அறிபவர்களுக்கு மகளிர் இடஒதுக்கீடு பீதியை ஏற்படும் ஒரு அனுபவமாகும்.
உரிமைகள் மறுக்கப்பட்ட முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை தடுப்பதற்கான சதித்திட்டம் தான் வெற்றிப் பெறப் போகிறது. பாரம்பரியமும், அதிகாரமட்டத்திலிலுள்ள செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெறுபவர்களுக்குத் தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு உதவும் என்ற ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் குற்றச்சாட்டு முற்றிலும் சரியான ஒன்றாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மகளிருக்கு இடஒதுக்கீடு: தந்திரங்கள் வெற்றி பெறுமா?"
கருத்துரையிடுக