ஒரு குற்றத்திற்கான புலனாய்வில் அடிப்படைச் சட்டம் என்னவென்றால் யார் அந்த குற்றத்தை நேரடியாக பார்த்தாரோ அவர் அந்தக்குற்றம் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டுள்ள நபர்களை அடையாளம் காணவேண்டும்.
ஆனால் மனித உரிமைப் போராளியும், குற்றவியல் வழக்கறிஞருமான ஷாஹித் ஆஸ்மியின் கொலை வழக்கில் இந்த அடிப்படையான, முக்கியமான விதியை காவல்துறை கடைப்பிடிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
ஆஸ்மி கொல்லப்படுவதை நேரடியாக கண்ட சாட்சிதான் அவருடைய அலுவலகத்தில் ப்யூனாக பணிபுரிந்த இந்தர். ஆஸ்மியை சுட்டுக்கொன்ற மூவரின் அடையாளமும் இவருக்கு நன்றாக தெரியும். ஆனால் இவரை காவல்துறையினர் ஆஸ்மி கொலைத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட 3 நபர்களை அடையாளம் காண்பதற்கு காவல் நிலையத்திற்கு அழைக்கவேயில்லை. கொலை நடந்து 4 நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் 3 பேரையும் காட்டி இவர்கள் தான் ஆஸ்மியைக் கொன்றவர்கள் என்றும், இவர்கள் மீது மஹாரஷ்ட்ரா தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க ஆலோசித்து வருவதாகவும் கூறினர் காவல்துறை அதிகாரிகள்.
ஆனால் காவல்துறை இக்கொலை வழக்கில் புலனாய்வுச் செய்ததில் உள்ள ஓட்டைகள் வெளிப்படையாக தெரிந்த நிலையில் ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது. ஆஸ்மியின் குடும்பத்தினரும், மனித உரிமை அமைப்பினரும், வழக்கறிஞர்களும் இக்கொலைத் தொடர்பாக நீதி விசாரணை அல்லது சி.பி.ஐ யின் விசாரணையை கோருகின்றனர். ஷாஹித் ஆஸ்மி பிரசித்திப் பெறக் காரணம், தீவிரவாதிகள் என்ற பொய்க் குற்றச்சாட்டுகளின் மூலம் சிறையிலடைக்கப்பட்டவர்களின் வழக்கு புலனாய்விலும், அரசு தரப்பிலும் உள்ள வீழ்ச்சிகளை வெளிக்கொணர்ந்ததே.
ஷாஹித் ஆஸ்மி முக்கியமாக மஹாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கறுப்புச் சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப் பட்டவர்களுக்காக வாதாடினார். ஆனால் அவருடைய கொலை வழக்கிலேயே போலீஸ் நிறைய குளறுபடிகளை செய்து வருவது முரண்பட்ட நகைப்பிற்கிடமான ஒன்றாகும். ஆஸ்மி கொல்லப்பட்டு 3 தினங்கள் கழிந்து கொலையாளிகளாக கருதப்படும் தேவேந்திர ஜக்தாப் என்ற ஜெ.டி, பிந்து டகாலே மற்றும் வினோத் விசாரே ஆகியோரை கைது செய்துவிட்டு வழக்கு விசாரணை முடிந்துவிட்டதாக கூறுகிறது காவல்துறை.
கொலையாளிகளில் ஒருவர் தலைமறைவாக உள்ளாராம். ஆஸ்மியின் மூத்த சகோதரர் ஆரிஃப் கடுமையாக விமர்சிக்கிறார் காவல்துறையின் புலனாய்வை. அவர் கூறுகிறார்,"ஆஸ்மியின் அலுவலக ப்யூன் இந்தருக்கு ஆஸ்மி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அனைத்துமே தெரியும். ஏன் கொலையாளிகளில் ஒருவன் ஆஸ்மியை சுடும் பொழுது இந்தரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்தான். அவ்வாறிருக்க போலீஸ் ஏன் குற்றவாளிகளை அடையாளம் காண்பிக்க இந்தரை காவல்நிலையத்திற்கு அழைக்கவில்லை? ஏன் அவர்கள் எங்களைக் கூட இதுத் தொடர்பாக தொடர்புக் கொள்ளவில்லை. இந்தரின் வாக்குமூலத்தின் மூலம் இக்கொலையின் உண்மையான பின்னணியை அறிந்து குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறையால் முடிந்திருக்கும்".என்றார்.
ஆஸ்மி கொலைத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட 3 நபர்கள் மீது இதர வழக்குகளில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பல காலமாக இவர்களை தேடிக்கொண்டுதான் உள்ளது. இக்கொலையில் குற்றஞ் சாட்டப்பட்ட ஜக்தாப் என்பவன் சோட்டாரஜனின் கும்பலில் இருந்தவன். கொலையாளிகள் என்று கூறப்படுவோர் பெரும்பாலோர் ஆஸ்மி கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்துதான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் கூறுகிறது 'கைதுச்செய்யப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக'. ஆனால் என்னக் காரணம் என்பதை வெளிப்படுத்தவில்லை.
மும்பை காவல்துறை கொலையாளிகள் பயன்படுத்தியதாக கூறி சில ஆயுதங்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பார்வைக்கு வைத்திருந்தனர். ஆனால் அதுத் தொடர்பான ஃபாரன்சிக் அறிக்கையினை வெளியிடவில்லை. காவல்துறையினர் எந்த கேள்விக்கும் விடையளிக்க முன்வரவில்லை. இந்த வழக்கை முடித்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் ஆஸ்மி கொலைவழக்கில் நீதிவிசாரணை அல்லது சி.பி.ஐ விசாரணைக்குக் கோரும் பொதுமக்களின் அழுத்தமும் அதிகரிக்கிறது.
செய்தி:தெஹல்கா
0 கருத்துகள்: on "புதிர்களும் ஓட்டைகளும் நிறைந்த ஒரு கொலை வழக்கு"
கருத்துரையிடுக