அகமதாபாத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் முதல் சுற்று விசாரணையை முடித்த பின்னர் அவரது அரசால் நியமிக்கப்பட்ட 3 அரசு வக்கீல்களையும் எஸ்.ஐ.டி. துருவித் துருவி விசாரித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரத்தின்போது, குல்பர்க் சொசைட்டியில் நடந்த மிகக் கொடூரமான கொலைகள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம், 2 கட்டமாக விசாரித்தது எஸ்.ஐ.டி. முதலில் பகலில் ஐந்தரை மணி நேரம் மோடியை விசாரித்த எஸ்ஐடி பின்னர் அவரை அனுப்பி வைத்தது. மீண்டும் இரவு 9 மணிக்கு மோடியை வரவழைத்த எஸ்.ஐ.டி. சுமார் நான்கரை மணி நேரம் விசாரித்தது.
இந்த நிலையி்ல் அன்றைய தினமே மோடி அரசால் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பான வழக்கில், மோடி அரசால், நியமிக்கப்பட்ட மூன்று அரசு வக்கீல்களையும் எஸ்ஐடி விசாரித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
மோடியிடம் முதல் சுற்று விசாரணையை முடித்து விட்டு அனுப்பிய பின்னர் இந்த மூன்று வக்கீல்களையும் வரவழைத்து எஸ்ஐடி விசாரித்துள்ளது. அந்த வக்கீல்கள் - வி.பி.ஆத்ரே, பியூஷ் காந்தி, எச்.எம். துருவ் ஆகியோர்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இந்த மூன்று பேரும்தான் அரசு வக்கீல்களாக செயல்பட்டனர். இவர்களில் துருவ் மூத்த வக்கீலாவார். இவர்களிடம் 20 நிமிடங்கள் விசாரணை நடந்துள்ளது. இவர்கள் மீது தீஸ்தா செட்லவாத் என்பவர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மூன்று பேரையும் அழைத்து எஸ்ஐடி விசாரித்துள்ளது.
3 பேருக்கும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், பாஜக ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளதா, தற்போதைய அரசுக்கு சாதகமாக இவர்கள் நடந்து கொண்டார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது.
source:thatstamil
0 கருத்துகள்: on "மோடி அரசால், நியமிக்கப்பட்ட மூன்று அரசு வக்கீல்களையும் விசாரித்த எஸ்.ஐ.டி"
கருத்துரையிடுக