பெங்களூர்:இந்திய அணு மின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக இழப்பீட்டுத் தொகை வழங்கும் வகையில் அணு விபத்து நஷ்டஈடு மசோதாவில் திருத்தம் கொண்டுவர சாத்தியம் உள்ளது என்று மத்திய சட்ட விவகாரம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
அயல்நாட்டு நிறுவனங்களுடனான கூட்டு அணு சக்தி ஒப்பந்தப்படி இந்தியாவில் அமையும் அணு மின் நிலையங்களில் ஒருவேளை விபத்து ஏற்பட்டால், அதற்கு யார் காரணமாக இருந்தாலும் ரூ.500 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கினால்போதும் என்று நிர்ணயம் செய்யும் அணு விபத்து நஷ்டஈடு மசோதாவை அரசு கொண்டுவர உள்ளது.
அணு மின்நிலையத்தில் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இழப்பீடு ஏற்பட்டாலும் அயல்நாட்டு நிறுவனம் இந்தியாவுக்கு குறிப்பாக பாதிக்கப்படும் மக்களுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமாக இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்று அப்பட்டமாக, அயல்நாட்டுக்கு சாதகமான, இந்தியர்களுக்கு பாதகமான இந்த மசோதாவை இதே வடிவில் ஏற்கமாட்டோம் என்று எதிர்க்கட்சிகளான பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து கடந்த 15ம் தேதி மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.
இதுகுறித்து பெங்களூரில் நிருபர்களிடம் புதன்கிழமை வீரப்ப மொய்லி கூறும்பொழுது; "அணு விபத்து நஷ்டஈடு மசோதாவை எதிர்க்கும் பாஜக, இடதுசாரிக் கட்சிகளுடன் இதுகுறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பேச்சு நடத்தும். அனைவரின் ஒப்புதலையும் பெற்று அந்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்.
அணு விபத்து நஷ்டஈட்டுத் தொகையை ரூ.500 கோடிக்கும் அதிகமாக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கும். இதற்காக அனைவரிடமும் ஆலோசனை நடத்தி இந்த மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரப்படும். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இடதுசாரிகள், தற்போது இந்த மசோதாவையும் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த ரூ.500 கோடி இழப்பீடு போதுமானதல்ல என்று நான் கூறமாட்டேன்". என்றார்.
source:dinamani
0 கருத்துகள்: on "அணு விபத்து நஷ்டஈடை உயர்த்தி மசோதாவில் திருத்தம் கொண்டுவர சாத்தியம் உள்ளது: வீரப்பமொய்லி"
கருத்துரையிடுக