16 மார்., 2010

இஸ்ரோ துப்பாக்கிச் சூடு, தீவிரவாத தாக்குதல் போலத் தெரியவில்லை - கர்நாடக டிஜிபி

பெங்களூர்:பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஆய்வு மையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் கூறும் தகவல்கள் குறித்து பெரும் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
கர்நாடக சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் டிஜிபி இன்பாண்ட் இது குறித்து நிருபர்களிடம் பேசுகையில்,
சம்பவ இடத்தில் வெளியாட்கள் யாரும் துப்பாக்கியால் சுட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இஸ்ரோ மையத்தின் வெளிப்புற கதவில் பாதுகாப்புக்கு இருந்த சிஐஎஸ்எப் கான்ஸ்டபி்ள் ஜாதவ், காலை 3.20 மணியளவில் காக்கி உடையணிந்த இருவர் அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்ததாகவும் திடீரென சிஐஎஸ்எப் படையினரை நோக்கி சுட்டதாகவும் கூறியுள்ளார்.

பதிலுக்கு தானும் 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறினார். ஆனால், போலீசார் சம்பவ இடத்திலிருந்து 6 குண்டுகளின் ஷெல்களைத் தான் மீட்டுள்ளனர். இதனால் வெறும் 6 ரவுண்டுகள் தான் சுடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மேலும் வெளியில் இருந்து யாரும் துப்பாக்கியால் சுட்டதற்கான எந்த தடயமும் இல்லை. சுவர்களிலோ அல்லது அந்தப் பகுதியிலோ குண்டுகள் தாக்கிய அடையாளமே இல்லை. மொத்ததில் இது தீவிரவாத தாக்குதல் போலத் தெரியவில்லை. இருப்பினும் முழு விசாரணைக்குப் பின்னரே எதையும் உறுதிப்படுத்த முடியும் என்றார்.

விசாரணைக்கு முதல்வர் உத்தரவு:
இந் நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு முதல்வர் எதியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், நான் காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். முழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். இது தீவிரவாதத் தாக்குதலா என்பது குறித்து ஏதும் சொல்ல முடியாது. விசாரணையின் முடிவில் தான் தெரியும். இப்போதே எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை. விசாரணை முடியட்டும். மத்திய அரசு கோரியுள்ளபடி விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றார்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரோ துப்பாக்கிச் சூடு, தீவிரவாத தாக்குதல் போலத் தெரியவில்லை - கர்நாடக டிஜிபி"

கருத்துரையிடுக