வாஷிங்டன்:ஃபலஸ்தீனுடனான சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற புதிய முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில், பேச்சுவார்த்தையை முறியடிக்கும் விதமான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்கா.
வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஃபலஸ்தீன் பூமியில் குடியேற்ற வீடுகளை கட்டுவதற்கான இஸ்ரேல் பிரதமரின் அறிக்கைக்கு எதிரான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடனான டெலிபோன் உரையாடலின் போது ஹிலாரி கிளிண்டன் இஸ்ரேலின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கெதிராக அமெரிக்காவின் கண்டனத்தை தெரிவித்ததாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்தார்.
இஸ்ரேலின் இத்தகைய அணுகுமுறை இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவிற்கு தவறான செய்தியை அளிக்குமென்றும், சமாதானத்திற்காக செயல்படுவோரின் நம்பிக்கையை பலகீனப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிச்செய்வதில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கவே ஏன் இத்தகைய அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டது என்பதுக் குறித்து புரிய முடியவில்லை என ஹிலாரி தெரிவிக்கிறார்.
இதற்கிடையே ஹிலாரியின் அறிக்கை, ஃபலஸ்தீனில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி கூறுகிறது. ஹிலாரியின் அறிக்கையை வரவேற்ற ஃபலஸ்தீனர்கள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலில் சுற்றுப்பயணம் செய்துக் கொண்டிருந்த பொழுதுதான் இஸ்ரேல் ஃபலஸ்தீனில் 1600 குடியேற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அமெரிக்க துணை அதிபர் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டிருக்கும் வேளையிலேயே இத்தகைய அறிவிப்பு அமெரிக்காவை அவமானப்படுத்துவதாக உள்ளது என்று, ஹிலாரி சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்முகத்தில் தெரிவித்திருந்தார். இஸ்ரேல் பிரதமரின் இந்த அறிவிப்பு சமாதான முயற்சிகளை வேண்டுமென்றே முறியடிப்பதற்குத்தான் என ஃபலஸ்தீன் தலைமை கூறியுள்ளது.
ஆனால் ஹிலாரியின் அறிவிப்பைக் குறித்து எதுவும் தெரியாது என்றும், ஃபலஸ்தீன் பிரதேசத்தில் எதார்த்தத்தில் ஒன்றுமே செய்ததில்லை என்று நெதன்யாகு கூறுகிறார். ஆனால், இதனையும் அமெரிக்கா விமர்சித்துள்ளது, இஸ்ரேல் அரசின் தலைவன் என்ற நிலையில் இஸ்ரேல் அரசு மேற்க்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பு ஏற்கவேண்டுமென்று க்ரவ்லி கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குடியேற்றம்:இஸ்ரேலுக்கெதிராக அமெரிக்காவும்"
கருத்துரையிடுக