மக்களவை, சட்டப் பேரவைகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் செய்தால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும். மசோதாவை மக்களவையில் ஆதரிக்காது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது ராஜ்நாத் சிங் இதை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; "மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் சமய அடிப்படையிலான உள்ஒதுக்கீட்டை புகுத்தாதையே அந்த மசோதாவின் பலமாக பாஜக நினைக்கிறது. இதனால்தான் தனது முழு ஆதரவையும் அந்த மசோதாவுக்கு அளித்து மாநிலங்களவையில் நிறைவேற ஒத்துழைத்தது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கும் விதத்தில் மசோதாவில் திருத்தத்தைக் கொண்டுவர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக முலாயம் சிங், லாலு பிரசாத், சரத் யாதவ் ஆகிய மூவரிடமும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் உறுதி அளித்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளோம். முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சம்மதித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்த அணுகுமுறையை பாஜக கண்டிக்கிறது" என்றார் ராஜ்நாத் சிங்.
முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீட்டை நீங்கள் எதிர்ப்பதால் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற முடிவுக்கு வரலாமா என்று கேட்டதற்கு, பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்றால் மண்டல் கமிஷனின் பரிந்துரையை ஆதரித்திருக்குமா என்று ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார். மண்டல் கமிஷனின் பரிந்துரையால் அதிக பலன் அடைந்துள்ளது முஸ்லிம் சமுதாயம்தான் என்றார்.
source:dinamani
0 கருத்துகள்: on "முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் செய்தால் எதிர்ப்போம்: ராஜ்நாத் சிங்"
கருத்துரையிடுக