பாக்தாத்:ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்த முன்னாள் ஈராக் இடைக்கால பிரதமரான இயாத் அல்லாவி ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் நூரி அல் மாலிக்கியின் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் பேச்சுவார்த்தையின் வாசல் திறந்துள்ளதாக அல்லாவி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஈராக் தேர்தலில் அதிகாரப்பூர்வ முடிவுகளின் படி அல்லாவியின் இஃதிலாஃப் வதுவனி அல் ஈராக்கி கட்சிக்கு 325 உறுப்பினர்களைக் கொண்ட ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் 91 இடங்கள் கிடைத்தன. ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர் எண்ணிக்கைக்கு 72 இடங்கள் குறைவாகும்.
நூரி அல் மாலிக்கியின் இஃதிலாஃப் தவ்லத்துல் கானூன் கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்துள்ளன. முக்ததா அல் ஸத்ரின் ஈராக்கி தேசிய முன்னணிக்கு 70 இடங்கள் கிடைத்துள்ளன. குர்திஸ்தான் கூட்டணிக்கு 43 இடங்கள் கிடைத்துள்ளன.
அதேவேளையில், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள நூரி அல் மாலிக்கி மறுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைக்கேடு நடந்ததாக குற்றஞ்சாட்டிய அவர் அதற்கெதிராக நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக தெரிவித்தார். ஆனால் மார்ச் ஏழாம் தேதி நடைபெற்ற தேர்தலிலும், வாக்கு எண்ணிக்கையிலும் முறைக்கேடு எதுவும் நடைபெறவில்லை என ஐ.நா மற்றும் அமெரிக்க கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சுன்னிப் பிரிவினரின் ஆதரவுதான் ஷியாபிரிவைச் சார்ந்தவரும், மதசார்பற்றவாதியுமான அல்லாவிக்கு எதிர்பார்க்காத வெற்றியை பெற்றுத் தந்துள்ளதாக கருதப்படுகிறது. சுன்னிகள் அதிகம் வாழும், ஐந்து மாகாணங்களிலும் அல்லாவி வெற்றிப் பெற்றுள்ளார்.
பாக்தாதிலும், ஷியாக்கள் அதிகம் வாழும் தெற்கு மாகாணங்களிலும் நூரி அல் மாலிக்கி வென்றுள்ளார். ஈராக்கி தேசிய முன்னணி கட்சிக்கு 1 மாகாணமும், குர்த் கூட்டணிக்கு வடக்கு ஈராக்கிலுள்ள 3 குர்த் மாகாணங்களிலும் வெற்றியைப் பெற்றுள்ளது. குர்த்-அரப் மோதல் நிலைநிற்கும் குர்திஸ்தானிலும் அல்லாவி எதிர்பார்க்காத வெற்றியை ஈட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் அமெரிக்காவின் கைப்பாவை எனக்கருதப்பட்ட அல்லாவி மற்றக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமா என்பதுக் குறித்து சந்தேகம் நிலவுகிறது. முன்பு கூட்டணியில் இடம்பெற்றிருந்த முக்ததா அல் ஸத்ரின் ஈராக்கி தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைத்து நூரி அல் மாலிக்கிதான் மீண்டும் ஆட்சியமைப்பார் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக்:இயாத் அல்லாவி ஆட்சியமைக்க தீவிரம்"
கருத்துரையிடுக