அங்காரா:முதல் உலகப்போரின் போது உதுமானியா அரசு ஆர்மீனியர்களை கூட்டுக்கொலைச் செய்த நிகழ்வை இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றிய சுவீடனைக் கண்டித்து துருக்கி தனது தூதரை சுவீடனிலிருந்து திரும்ப அழைத்தது.
349 உறுப்பினர்கள் கொண்ட சுவீடன் பாராளுமன்றத்தில் துருக்கி ஆர்மீனியர்களுக்கெதிராக நடத்திய கூட்டுக் கொலை இனப்படுகொலை என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 131 பேர் ஆதரித்தனர். 130 பேர் எதிர்த்தனர். 88 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆஜராகவில்லை.
சுவீடன் பாராளுமன்றத்தின் இந்நடவடிக்கை அரசியல் ரீதியான திட்டமிட்ட செயல் என்றும் தீர்மானத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் துருக்கி பிரதமர் ரஜஃப் தய்யிப் உர்துகான் தெரிவித்தார். மேலும் அடுத்த வாரம் செல்லவிருந்த சுவீடன் சுற்றுப் பயணத்தையும் அவர் ரத்துச் செய்தார். சுவீடனின் நடவடிக்கையை அதிபர் அப்துல்லாஹ் குல்லும் கண்டித்துள்ளார்.
இதற்கிடையில் சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் கார்ல் பில்ட் கூறுகையில், "வாக்கெடுப்பு ஒரு தவறு. இது துருக்கி-சுவீடனுக்கிடையேயான தூதரக உறவை பாதிக்காது. ஆர்மீனியாவும், துருக்கியும் பரஸ்பரம் உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் சுவீடனின் நடவடிக்கை மேலும் பிரச்சனைகளை அதிகம் சிக்கலில் ஆழ்த்தும்" என்றார்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை இதைப் போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கான துருக்கி நாட்டுத் தூதரை துருக்கி திரும்ப அழைத்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இனப்படுகொலை தீர்மானம்:சுவீடனுக்கான தூதரை திரும்ப அழைத்தது துருக்கி"
கருத்துரையிடுக