ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், மத்திய இணை அமைச்சர் சுல்தான் அஹ்மத் ஆகியோர் பேரணியில் உரை நிகழ்த்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
காலை 11மணிக்கு மண்டி ஹவுஸிலிருந்து ஆரம்பித்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.பாராளுமன்றத்திற்கு அருகிலிலுள்ள ஜந்தர் மந்தரில் முடிவடைந்த பேரணியை வரவேற்பதற்கு தலைவர்களின் நீண்ட வரிசை காத்திருந்தது.
பெண்கள் இடஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கையில் விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் தனது உரையில் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, "தலித்துகளையும், முஸ்லிம்களையும் புறக்கணிப்பதற்கான சதித்திட்டம் இந்த மசோதாவில் அடங்கியுள்ளது. இதனை அங்கீகரிக்க முடியாது. பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவில் இரு பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அனுமதித்தே தீரவேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சரும்,திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுல்தான் அஹ்மத் உரையாற்றுகையில், "மண்டல் கமிஷன் அறிக்கையின் சிபாரிசு மூலமாக மற்ற சமூகத்தினர் இடஒதுக்கீட்டை பெற்ற வேளையில் முஸ்லிம்கள் பிற்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். முஸ்லிம்களின் பிற்பட்ட நிலையை சுட்டிக் காட்டிய மிஸ்ரா, சச்சார் கமிஷன் அறிக்கைகள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுத் தேவை என்பதைச் சுட்டிக்காட்டின.
மேற்கு வங்க முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாகும். இதற்கிடையே மேற்குவங்க அரசு 10 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாக கூறியுள்ளது. இது ஒரு ஏமாற்று வேலையாகும். இதர பிற்பட்ட பிரிவில் மேற்குவங்காள முஸ்லிம்களின் சதவீதம் 2.4 சதவீதமாகும். 1000 வேலை வாய்ப்புகள் வந்தால் வெறும் ஏழு பேருக்கு மட்டுமே வேலைக் கிடைக்கும்." என அவர் கூறினார். பாப்புலர் ஃப்ரண்ட் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோசியல் டெமோக்ரேடிக் தலைவர் இ.அபூபக்கர், முன்னால் எம்.பி.செய்யத் ஷஹாபுத்தீன் எம்.பி, திருமாவளவன் எம்.பி, தேஜ்சிங், உதித்ராஜ், பேராசிரியர் முஹம்மது சுலைமான், பேராசிரியர் சாயிபாபா, ஸஃபருல் இஸ்லாம் கான், வி.பி.நாஸருத்தீன்,முஹம்மது அலி ஜின்னா, வழக்கறிஞர் ஸாஜித் சித்தீகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
இறுதியாக முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரும் மனுவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அளிக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தலைமையில் ராஜஸ்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஹாஃபிஸ் முஹம்மது ஹனீஃப், மேற்குவங்காள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஷஹாபுத்தீன் ஆகியோர் கொண்ட குழு சென்றது.
0 கருத்துகள்: on "போராட்ட முழக்கத்துடன் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பு பேரணி"
கருத்துரையிடுக