டேவிட் கோல்மன் ஹெட்லியை அடுத்த 30 நாட்களுக்குள் நேரடியாக விசாரிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்துறை அமைச்சகம் உள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி அமெரிக்க புலனாய்வுத் துறையிடம் சிகாகோவில் சிக்கினான்.
தீவிரவாத இயக்கத்திற்காக தீட்டிய பல்வேறு சதித் திட்டங்களுக்காக ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த விசாரணையின் போது, மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு கொண்டிருந்ததையும் ஹெட்லி ஒப்புக்கொண்டான்.
இதனால், ஹெட்லியை இந்தியா விசாரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமெரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் ஹெட்லியிடம் இந்தியா நேரடியாக விசாரணை நடத்த அனுப்பப்படுமா என்பது குறித்து அமெரிக்கா தரப்பில் இருநது உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.
இந்நிலையில், டெல்லி அமெரிக்க தூதர் டிமோதி ரோமர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று சந்தித்து ஹெட்லி விவகாரம் பற்றி பேசினார். ஆலோசனைக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ரோமர், "ஹெட்லி விவகாரம் குறித்து அமெரிக்க அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதை மிக முக்கிய விஷயமாக அமெரிக்கா பாவிக்கிறது. விரைவில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
ஆனால், சிகாகோ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட உள்ள ஹெட்லியிடம் இந்தியா நேரடியாகோ அல்லது முழுமையாகவோ விசாரணை நடத்துவது சாத்தியப்படாமல் போக வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஹெட்லியிடம் இந்தியா நேரடியாக விசாரணை நடத்துவதை அமெரிக்க பல்வேறு காரணங்களுக்காக தவிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஹெட்லியை விசாரிக்க அனுமதிக்கும் படி அமெரிக்காவிடம் முறைப்படி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைக்க உள்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இந்த கோரிக்கை மனு அமெரிக்க நீதித்துறைக்கு அனுப்பப்பட்டு, ஹெட்லி வழக்கை விசாரிக்கும் சிகாகோ நீதிமன்ற நீதிபதி இதை பரிசீலிப்பார். இதன் பின்னர் முடிவு தெரியும். எப்படியும், அடுத்த 30 நாட்களுக்குள் ஹெட்லியிடம் விசாரணை நடத்த வாய்ப்பு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் உள்துறை அமைச்சகம் உள்ளது.
source:thatstamil
0 கருத்துகள்: on "ஹெட்லியை அடுத்த 30 நாட்களுக்குள் நேரடியாக விசாரிக்க வாய்ப்பு கிடைக்கும்: எதிர்பார்ப்பில் உள்துறை அமைச்சகம்"
கருத்துரையிடுக