பாக்தாத்:ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புகளில் 38 பேர் மரணமடைந்தனர். 150 பேருக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
ஜெர்மனி, எகிப்து, ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கு வெளியே சில நிமிடங்கள் வித்தியாசத்தில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. வெடிப்பொருட்களுடன் காரில் வந்தவர்கள் தான் இக்குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் காஸிம் அல் மூஸவி தெரிவித்தார்.
ஈராக் தேசிய காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான அஹ்மத் ஸலபியின் அலுவலகத்தை நோக்கியும் தாக்குதல் நடைபெற்றதாக மூஸவி தெரிவித்தார். ஈரான் தூதரகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். தூதரகங்களின் வாசலுக்கு வெளியே கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்பு அதிகாரிகள் என செய்திகள் கூறுகின்றன. இதில் தூதரக பணியாளர்கள் உட்படுமா? என்பது தெளிவில்லை எனவும் மூஸவி தெரிவித்தார்.
மிக அதிக அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட பகுதியில் குண்டுவெடிப்புகள் நடைப்பெற்றது பாக்தாத் நகரத்தை நடுங்கச் செய்தது. குண்டுவெடிப்புகளில் கட்டிடங்களும், வாகனங்களும் நாசமடைந்தன. அப்பிரதேசம் முழுவதும் புகைமூட்டத்தில் மூழ்கியிருந்தது. இறந்தவர்களின் உடல்கள் நாலாபுறத்திலும் சிதறின. காயமடைந்தவர்களின் அழுகுரல் பரிதாபகரமாகயிருந்தது. பல இடங்களிலும் குண்டுச்சத்தம் கேட்டதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
வங்கிக் கட்டிடத்தின் அருகில் வெடிப்பொருட்கள் நிறைத்த காருடன் ஒருவர் கைதுச் செய்யப்பட்டதாகவும் மூஸவி தெரிவித்தார். தாக்குதலின் பொறுப்பை எவரும் இதுவரை ஏற்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு அரசியல் ஸ்திரமற்றத்தன்மை நிலவும் சூழலில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தத அதிகாரிகளை நிலைகுலைய வைத்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக்:வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வெளியே தொடர் குண்டுவெடிப்பு 38 பேர் மரணம்"
கருத்துரையிடுக