வாடிகன்:சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கத்தோலிக்க பாதிரியார்கள் மீது சாட்டப்படும் குற்றச் சாட்டுக்களை செமிட்டிக் இனத்திற்கெதிரான யூதர்களின் குரோத நடவடிக்கைகளுக்கு ஒப்பீடுச்செய்து கடந்த புனித வெள்ளி அன்று ரோம் சர்ச்சில் உரை நிகழ்த்திய போப் பெனடிக்டின் ஆலோசகரான பாதிரியார் ரானியெரோ காண்டலாமெஸ்ஸா தான் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரைக்கு மன்னிப்புக் கோரினார்.
இத்தகைய விமர்சனம் தனது உரையில் உட்படுத்தியதைக் குறித்து போப்பிற்கு தெரியாது என அவர் குறிப்பிட்டார். இத்தாலியின் கோரியரெ டெல்லா செரா என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார் காண்டலாமெஸ்ஸா.
"யூத மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக நான் மனப்பூர்வமாக வருந்துகிறேன். தற்ப்பொழுது கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை யூத விரோதத்துடன் ஒப்பீடுச்செய்வது சரியில்லாததுதான்." என்றும் காண்டலாமெஸ்ஸா கூறினார்.
காண்டலாமெஸ்ஸாவின் உரைக்கு எதிராக யூத அமைப்புகளும், பாதிக்கப்பட்டவர்களும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காண்டலாமெஸ்ஸாவின் அறிக்கையை வாடிகனின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல என வாடிகன் கூறியிருந்தது.
போப் பெனடிக்டின் சொந்த நாடான ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்களுக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இத்தகைய குற்றச்சாட்டுகளை வாடிகன் மூடிமறைத்ததற்கான தகவல் வெளியானதைத் தொடர்ந்து பெரும் கண்டன குரல் எழுந்தது. இதனைக் கண்டித்து தான் காண்டலாமெஸ்ஸா இத்தகைய சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தினார்.
இதற்கிடையே போப்பின் பிரிட்டன் சுற்றுப் பயணத்திற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரிட்டனுக்கு போப் வரும்பொழுது பாலியல் குற்றச்சாட்டுகளின் பெயரில் போப்பை சர்வதேச சட்டப்படி(யூனிவெர்சல் ஜூரிஸ்டிக்ஸன்) விசாரணைச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால் ஒரு நாட்டின் அரசியல் தலைவர் என்ற நிலையில்(வாடிகன் ஒரு குட்டிநாடாகும்.இதன் தலைவர்தான் போப்) போப்பிற்கு சட்டவிதிவிலக்குகள் ஏதேனும் உண்டா என்பதைக் குறித்து சட்டவல்லுநர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
பிரிட்டன் வரி செலுத்துவோருக்கு 150 லட்சம் டாலர் அதிக சுமையை உருவாக்கும் போப்பின் சுற்றுப்பயணத்தை தடைச் செய்ய வேண்டும் எனக்கோரி டவுணிங் ஸ்ட்ரீட் இணையதளத்தில் போஸ்ட் செய்த மனுவில் ஆயிரக்கணக்கானோர் கையொப்பமிட்டுள்ளனர்.
கொடூரமான குற்றங்களைச் செய்துக் கொண்டு ஒரு நாட்டிற்கு வருகைதரும் எந்தவொரு நபருக்கெதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்படுவதற்கான சர்வதேச சட்டம்தான் யூனிவெர்சல் ஜுரிஸ்டிக்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சர்ச்சையைக் கிளப்பிய உரை:வாடிகன் பாதிரியார் மன்னிப்புக் கேட்டார்"
கருத்துரையிடுக