டெஹ்ரான்:காணாமல் போன ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி தற்ப்பொழுது அமெரிக்காவிலிருப்பதாக கூறும் தகவல் அவரை அமெரிக்கா கடத்திச் சென்றுள்ளது என்ற ஈரானின் நிலைப்பாட்டை உறுதிச் செய்வதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மக்காவிற்கு புனித யாத்திரைச் சென்ற ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி ஷரம் அமீரி அமெரிக்காவிலிருப்பதாக கடந்த மார்ச் 10 ஆம் தேதி அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், அமீரி சுயமாக அமெரிக்காவிடம் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கெதிராக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏவுக்கு உதவுவதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது.
இதனை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமில் மெஹ்மான் பரஸ்த் மறுத்துள்ளார். அமீரி காணாமல் போனபோது அவரைக் குறித்து தங்களுக்கு ஒன்றுமே தெரியாது எனக்கூறிய அமெரிக்காவின் நிலைப்பாட்டிலிருந்து அவர்களுடைய திருட்டுத்தனம் அம்பலப்பட்டதாகவும், அமெரிக்காவிற்கு ஏற்கனவே இதுக்குறித்து தெரியும் என பரஸ்த் தெரிவிக்கிறார்.
மாலிக் அஸ்தர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரேடியோ ஐஸோடோப் வல்லுநரான அமீரி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஏ.பி.சி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் கூறியிருந்தது. கடந்த ஆண்டு உம்ராவை நிறைவேற்றுவதற்காக மக்காச் சென்றிருந்த அமீரி சவூதி அரேபியாவிலிருந்து காணாமல் போனார். இச்செய்தி வெளியானவுடனேயே ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மனுஷர் முத்தகி உள்ளிட்டோர் அமெரிக்காதான் இதன் பின்னணியில் உள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அமீரியை சவூதி அரேபியா அமெரிக்காவிடம் ஒப்படைத்ததாக கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அளித்த பேட்டியில் கூறியிருந்தார் மெஹ்மான் பரஸ்த். ஆனால் அவ்வமயம் அமெரிக்கா தங்களுக்கு இதனைக் குறித்து ஒன்றும் தெரியாது என மழுப்பியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அணுசக்தி விஞ்ஞானியை அமெரிக்கா கடத்தியதாக ஈரான் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக