பீகார் மாநிலத்தில் லட்சுமண்பூர் பாத் என்ற ஊரில் 1997-ம் ஆண்டு 58 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், 16 பேருக்கு மரண தண்டனையும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து ஜெஹனாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி விஜய்பிரகாஷ் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார்.
மேல் ஜாதியைச் சேர்ந்தவர்களின் ரணவீர் சேனா என்ற அமைப்பினர் இந்தப் படுகொலைகளை நிகழ்த்தினர். அப்போது இது அரசியல் அரங்கில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சமதா கட்சிகளின் தலைவர்கள் அப்போது வலியுறுத்தினர்.
தலித்துகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த மேல் ஜாதியினர் ரணவீர் சேனை மூலம் லட்சுமண்பூர் பாத் கிராமத்தைச் சேர்ந்த தலித்துகளை வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றனர்.
இந்தக் கொலைக்குப் பின்னால் அரசியல் சதித் திட்டம் ஏதும் இருக்குமா என்று ஆராய அப்போதைய முதலமைச்சர் லாலு பிரசாத், விசாரணைக் கமிஷனை நியமித்தார். சி.பி. தாக்கூர் போன்ற மூத்த பாஜக தலைவர்கள் கமிஷன் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
பிறகுதான் இது நில உடமையாளர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்குமான மோதல் என்பது உறுதியானது. இதில் ஜாதி வெறியும் சேர்ந்ததால் இரக்கமற்ற முறையில் அப்பாவி தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு நீதிமன்றங்களில் அலைக்கழிக்கப்பட்டே வந்தது. 2008 டிசம்பர் 23-ம் தேதி தான் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிதான் இந்த வழக்கில் விசாரணை ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வழக்கில் மொத்தம் 152 பேர் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டாலும் 91 பேர்தான் சாட்சியம் அளித்தனர். நடுவில் 1999-ல் இந்த வழக்கு ஜெஹனாபாதிலிருந்து பாட்னா நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டது. பிறகு மீண்டும் ஜெஹனாபாதிலேயே விசாரணை நடைபெற்றது.
மரண தண்டனை பெற்றவர்கள்: கிரிஜா சிங், சுரேந்திர சிங், அசோக் சிங், கோபால்சரண் சிங், பலேஷ்வர் சிங், துவாரகா சிங், விஜேந்திர சிங், நவல் சிங், பலிராம் சிங், நந்து சிங், சிவமோகன் சர்மா, பிரமோத் சிங், சத்ருகன் சிங், ராம்கேவல் சர்மா, தர்மா சிங், நந்த சிங்.
ஆயுள் தண்டனை பெற்றவர்கள்: பப்லு சர்மா, அசோக் சிங், மிதிலேஷ் சர்மா, தரீக்ஷன் செüத்ரி, நவீன் குமார், ரவீந்திர சிங், சுரேந்திர சிங், சுநீல் குமார், பிரமோத் குமார், சந்திரசேகர் சிங்.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, குற்றஞ் சாட்டப்பட்டிருந்த புகால் சிங், சுதர்சன் சிங் ஆகியோர் இறந்துவிட்டனர்.
source:dinamani
0 கருத்துகள்: on "பாட்னா 58 தலித்துகள் படுகொலை வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை"
கருத்துரையிடுக