புதுடெல்லி:வகுப்புக் கலவரத்தை தடுக்கும் மசோதாவை தாக்கல் செய்யுமுன் அதனை திருத்தி எழுதும் முயற்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்மசோதாவிற்கு அனுமதியளித்த போதிலும், சோனியாகாந்தியின் உத்தரவின் படி இம்மசோதா திருத்தி எழுதப்படுகிறது. வகுப்புக் கலவரங்களை கடுமையான முறையில் தடுப்பதில் அரசும், காவல்துறையும் தோல்வியுற்றால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க இம்மசோதாவில் எந்த சட்டப்பிரிவும் இல்லை என பல்வேறு அமைப்புகள் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் மசோதாவில் சட்டப்பிரிவுகளில் தேவையான மாற்றங்கள் செய்ய கோரி மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்துதான் இம்மசோதாவில் திருத்தம் செய்யப்படுகிறது. வகுப்புக் கலவரத்திற்கு காரணமானவர்களுக்கும், அவர்களுக்கு துணைபுரியும் காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் தப்பிக்க இயலாதவிதம் சட்டப்பிரிவுகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பதுதான் சோனியாவின் உத்தரவு.
கடந்த காலங்களில் இத்தேசம் சந்தித்த மோசமான கலவரங்கள் இனி ஏற்படாத வண்ணம் இம்மசோதா வலுவாக இருக்கவேண்டும் என்று சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இக்கடிதத்துடன் குறிப்பிட்ட அமைப்புகள் அளித்த மனுவின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வகுப்புக் கலவரத்தடுப்பு மசோதாவில் கலவரத்தை தூண்டுபவர்களை தண்டிக்க சட்டப்பிரிவு இல்லை. அதேபோல் கலவரத்தை தடுக்க மாநில அரசும், காவல்துறையும் தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டப்பிரிவு இல்லை. கலவரம் ஏற்பட்டல் அம்மாநில அரசின் அனுமதியில்லாமலேயே மத்திய அரசின் தலையிடும் சட்டப்பிரிவு வேண்டுமென்றும் பல அமைப்புகள் கோரியுள்ளன. இதனை பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க தேசிய கமிட்டி வேண்டுமென்று அவ்வமைப்புகள் கூறியுள்ளன. தேசிய மனித உரிமை கமிஷன் போன்ற அமைப்புகளிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கலாம். கலவரத்தைக் குறித்து விசாரணைச்செய்து அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் கமிட்டிக்கு அதிகாரம் தேவை. இத்தகைய வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் கவனிக்கவேண்டும்.
ஆனால் எந்தந்த மாற்றங்களை சட்ட அமைச்சகம் செய்யப்போகிறது என்பது தெளிவாகவில்லை. வகுப்புக் கலவரத்தடுப்பு மசோதாவை இவ்வருட இறுதியில் நிறைவேற்ற மத்திய அரசு முயல்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "வகுப்புக் கலவரத்தடுப்பு மசோதா திருத்தம் செய்யப்படுகிறது"
கருத்துரையிடுக