
1923ல் ஸ்பெயின் நாட்டில், 'கேடலோனியா' நகர புத்தக விற்பனையாளர்கள் 'மிகையில் டே செர்வாண்டிஸ்' என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதி புத்தக தினமாகப் பரிந்துரைத்தனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் என்பதற்காக ஏப்ரல் 23ம் தேதி சர்வதேச புத்தக தினமாக 1995ல் யுனெஸ்கோ அறிவித்தது.
புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது: புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள். புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான்! ஆனால், இது இங்கல்ல... அமெரிக்காவில்! சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது.
இந்தியா நிலை என்ன? நம் இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல; படிக்கின்றனர். இணையம், இ-புக், இ-ரீடர் என்று நவீன தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்தில், இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகளிடம், புத்தகத்தின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என்பது, சிலரின் கருத்தாக, ஆதங்கமாக, வேதனையாகக் கூட இருக்கிறது. உண்மை அதுதானா என்பது தீர ஆராயப்பட வேண்டியதுதான்.
அண்மையில் நேஷனல் புக் டிரஸ்ட், புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி, இந்திய இளைஞர்களிடையே ஓர் ஆய்வு நடத்தியது. அதில், செய்திகள் மற்றும் தகவல்கள் அறிவதற்காக, 63 சதவீத இளைஞர்கள், நாளிதழ்களையும், 17 சதவீதம் பேர், வார, மாத பத்திரிகைகளையும் நாடுகின்றனர் என்றும், செய்திகளுக்காக இணையத்தை நாடுவோர், வெறும் 7 சதவீதம் தான் என்பதும், தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு, இந்திய இளைஞர்களிடையே, படிக்கும் பழக்கம் இன்னும் குறைந்து விடவில்லை என்பதை காட்டுகிறது.
ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 2,000 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந் துரை செய்கிறது. ஆனால் நம்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, 32 பக்கங்கள் மட்டுமே படிக்கின்றனர் என, யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
புத்தகக் காலம்: ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை புத்தகச் சந்தைகளின் காலமாகக் கருதப்படுகிறது. சென்னை, டில்லி, கோல்கட்டா ஆகிய இந்திய நகரங்களில் புத்தகச் சந்தை முடிந்துவிட்டது. சர்வதேச அளவில் பொலோக்னா, பீனஸ் ஏர்ஸ், கெய்ரோ, ஜெருசலம், லண்டன், பாரீஸ், செயின்ட் பீட்டர் ஸ்பர்க், தாய்பே ஆகிய நகரங்களில் முன்பின்னாக புத்தகச் சந்தைகள் தொடங்கிவிட்டன. விரைவில் அவை முடிவடைய இருக்கின்றன. பல இணையதள நூலகங்கள் இணைந்து உலக இணையதளப் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. இதில் 25 லட்சம் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள முகவரி : http://www.eworldbookfair.com/
0 கருத்துகள்: on "இன்று சர்வதேச புத்தக தினம்"
கருத்துரையிடுக