காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் ஒரே நாளில் 13 தடவை குண்டுவீசித் தாக்கியதில் 1 குழந்தை உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. நான்கு விமானத் தாக்குதல்கள் கான் யூனுஸ் நகரத்திற்கு அருகில் நடந்தது.
கடந்த வாரம் இஸ்ரேல் காஸ்ஸாவில் அத்துமீறி நுழைய முயன்ற பொழுது ஹமாஸ் போராளிகளின் கடுமையான எதிர்ப்புப் போராட்டத்தில் இஸ்ரேலின் 2 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இஸ்ரேலிய விமானங்கள் பால் தொழிற்சாலை, விவசாய நிலங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றின் மீது குண்டுவீசித்தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெவ்வேறான மூன்று இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் கூறுகிறது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஏராளமான குழந்தைகள் உள்பட 1400 ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் ஒரு கூட்டுப்படுகொலைக்கு தயாராகிவருவதாக அறிகுறிகள் தென்பட்டன. காஸ்ஸாவில் மீண்டும் வலுவானத் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், துணை பிரதமர் ஷில்வியன் ஷாலோமும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
தாக்குதல் நடத்தப் போவதற்கான எச்சரிக்கை நோட்டீஸ்களை காஸ்ஸாவின் மீது இஸ்ரேலிய விமானங்கள் நேற்று முன் தினம் வீசின. காஸ்ஸாவிலிருந்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்தான் இதற்கு காரணம் என இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால் கடந்த ஒருவருடத்திற்கிடையே ஒரேயொரு இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தவர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார். ஆனால் இதே காலக்கட்டத்தில் 90 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அக்கிரமத்தை தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தயாராகவேண்டும் என ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸ்ஸாவின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா வலியுறுத்தியுள்ளார்.
கூடுதல் தாக்குதல்களை தடுப்பதற்கு காஸ்ஸாவில் இதர போராளி இயக்கங்களுடன் தொடர்பு கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜெருசலத்தில் அல் அக்ஸா மஸ்ஜிதிற்கு அருகில் ஹூர்வா யூத தேவாலயம் திறந்ததும் அதிகமான ஃபலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்து புதிய குடியேற்ற நிர்மாணங்களை கட்டப்போவதாக இஸ்ரேல் அறிவித்ததும் இப்பகுதியில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேல் மீண்டும் விமானத்தாக்குதல்"
கருத்துரையிடுக